Recents in Beach

குழந்தை வளர்ப்பு சரியும் - தவறும் ?

Image result for குழந்தை வளர்ப்பு சரியும் - தவறும் ?

கருத்தரித்தலில் இருந்து குழந்தையின் இரண்டாவது பிறந்த நாள் வரையிலான காலக்கட்டம் குழந்தையின் வாழ்வை, எதிர்காலத்தைக் கட்டமைக்கும் மிக முக்கியமான காலக்கட்டமாகும். இந்தக் காலக்கட்டத்தில் கர்ப்பிணி எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து மற்றும் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்து உணவகள்தான் அந்தக் குழந்தையின் தலை எழுத்தை, ஒரு நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கர்ப்பாகாலத்தில் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் வளர்ச்சி பெறவும் பெரிதும் உதவுகின்றது. உடல் பருமன், இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கான அஸ்திவாரம் இந்த முதல் 1000 நாளில்தான் எழுப்பப்படுகிறது என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த முதல் 1000 நாளில், ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமான ஏற்படக்கூடிய வளர்ச்சி குறைபாடு, பாதிப்புகளை பின்னாளில் என்ன செய்தாலும் பெற முடியாது. எனவே, முதல் 1000 நாளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டியது அவசியம்.

0-9 மாதங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரையின்பேரில் மாத்திரை வடிவிலும் ஊட்டச்சத்துக்களை எடுக்கலாம். இதுதவிர, வைட்டமின் டி, பி2, பி6, பி12, கோலைன் மற்றும் அயோடின் , கால்சியம் உள்ளிட்டவையும் அவசியம். தினசரி தேவையான அளவு கொழுப்புச்சத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் காலத்தில் தாய் எடுத்துக்கொள்ளும் உணவுதான், எதிர்காலத்தில் அந்த குழந்தைக்கு தொற்றா நோய்கள் வராமல் தடுக்கும்.

பிரசவத்துக்குப் பிறகு முதல் ஆறு மாதங்கள்

குழந்தை பிறந்ததும் கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும். சிலர் முதலில் வரக்கூடிய பால் ஆரோக்கியமற்றது என்று சொல்வது உண்டு. இது தவறான கருத்து. முதலில் வரும் கொலஸ்டிரம் என்று சொல்லப்படும் சீம்பாலில்தான் குழந்தைக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் உள்ளன. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் புகட்டினால் போதும். அதன்பிறகு, பாதுகாப்பான திட உணவை அறிமுகப்படுத்தலாம். குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை தாய்ப்பால் புகட்டுவது மிகவும் நல்லது.

6 முதல் 12 மாதம்

தாய்ப்பால் அருந்துவதால் மட்டுமே குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல் கிடைத்துவிடாது. எனவே, இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைக்கு திட உணவு அறிமுகப்படுத்த வேண்டும்.

12 மாதங்களுக்குப் பிறகு

குழந்தைகள் ஒரு வயதுக்குப் பிறகு மிக வேகமாக வளர்ச்சி அடைய ஆரம்பிப்பர். இந்த வளர்ச்சிக்குத் தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்தை அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பெரியவர்களைக் காட்டிலும் இந்த பருவத்தில் உள்ள குழந்தை ஏழு மடங்கு அதிகமாக சாப்பிடும் (ஒரு கிலோ உடல் எடைக்கு தேவையான உணவு அளவு என்ற கணக்கில்). ஊட்டச்சத்துக்களுடன் புரதச் சத்தும் அதிக அளவில் தேவைப்படும். இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, குழந்தை தானாகவே சாப்பிட அனுமதிக்க வேண்டும். குழந்தைக்கு என்று தனியாக உணவு கொடுத்து, அதைச் சாப்பிடும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடப் பழக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களைப் பார்த்துதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.

குழந்தை வளர்ப்பு சரியும்… தவறும்…

1. குழந்தை அழுதால் மட்டுமே சாப்பாடு கொடுக்கும் வழக்கம் சிலருக்கு உண்டு. இது தவறு. குழந்தையின் பசி அறிந்து உணவளிக்க வேண்டும். இல்லை எனில், குழந்தைக்கு, ‘நம்மை யாரும் கவனிக்கவில்லை’ என்ற எண்ணம் வந்துவிடும்.

2. குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதோ, எதையும் வாங்கிக்கொடுக்காமல் ஏக்கத்தில் விடுவதோ தவறு. குழந்தைக்கு எது தேவையோ, அதைச் செய்ய வேண்டும்.

3. குழந்தை அடம்பிடிக்கிறது என்பதற்காக சாக்லெட், ஜங்க் ஃபுட் கொடுத்து பழகக் கூடாது.

4. குழந்தை முன்னிலையில் சோகத்துடனோ கவலை தோய்ந்த முகத்துடனோ இருக்கக் கூடாது. இவை குழந்தையைப் பாதிக்கும்.

5. டி.வி.யில் வன்முறைக் காட்சிகள், பாலியல் ரீதியான காட்சிகளைப் பார்ப்பதைத் தடுப்பது அவசியம். அவர்களுக்கு அதைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்கூட மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். தேவையில்லாத வயதில் தேவையில்லாத தகவல் குழந்தையின் மூளையில் பதிவது ஆபத்து.