Recents in Beach

குழந்தைகளை வளர்க்கும் நான்கு வகையான முறைகள்




குழந்தைகள் வளர்ப்பதில், வளர்வதில் அல்லது பராமரிப்பதில் பெற்றோர் பங்கு மிகவும் வலிமைமிக்கதாக இருக்கிறது. குழந்தை வீட்டில் வளரும் விதம் அல்லது வளர்க்கப்படும் விதம் அதன் எதிர்காலத்தை அழகும் அர்த்தமும் உள்ளதாக ஆக்கிக்கொள்ள அல்லது அசிங்கம் நிறைந்தாக மாற்றிக்கொள்வதற்கான மிக முக்கிய திறவுகோலாக அமையலாம். குழந்தைகள் வாழ்வை ஆரம்பிக்கும் முதலாவது இடமான வீடு, வரவேற்பு, அன்பு, அரவனைப்பு, அமைதி போன்ற மனித மனங்கள் எதிர்பார்க்கும் மென்மையான குணங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை குழந்தை உணர்ந்து கொண்டால் தான் பக்குவமான, பாதுகாப்பான இடத்தில் வளர்கிறேன் என்ற அழகான உணர்வை தன் மனதுக்குள் விதைக்க ஆரம்பிப்பான். பொருட்களைப்பயன்படுத்தி அலங்காரமாக கட்டப்பட்ட இடமாக மட்டும் வீடுகள் இருக்காமல் அங்கு மனிதர்கள் வாழும் அழகான இடமாக அது இருக்க வேண்டும். ‘உங்கள் வீடுகளை மனிதர்கள் வாழும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்’ என வில்லியம் சேக்ஸ்பியர் சொன்னதை இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

    எனது வீட்டின் அத்திவாரம் என்ன?
    அது எனது உருவாக்கமா?
    பொறாமை, வெறுப்பு, கவலை போன்ற பாதிப்பான உணர்வுகளின் இடமா?
    கட்டலை, அதிகாரம் விடுக்கும் இடமா?
    நன்பர்கள் அல்லது மற்றவர்களின் கருத்தோட்டத்தில் உருவான இடமா?
    அல்லது இறைவனின் சட்டத்தாலும் அவனது ஆட்சியாலும் உருவான இடமா?

போன்ற வினாக்களுக்கு பதில் தேடினால் சரியான பதிலை உங்கள் உள்ளுணர்வுகள் உங்களுக்கு எடுத்துச்சொல்லும். வீடு உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதியைப்பெற்றுத்தரும் இடமாக இருக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புவோம். வன்முறைகள், தர்க்கங்கள், வேற்றுமைகள் வீட்டுக்குள் நிகழ்வதை யாரும் அனுமதிக்க மாட்டோம். இதுதான் குழந்தைகளினதும் தேவையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. சிறந்த சிந்தனையுள்ள நல்ல மனிதர்கள் வாழும் வீட்டிலிருந்துதான் ஆரோக்கியமான ஆளுமையுள்ள குழந்தைகள் உருவாகின்றனர்.

வீட்டில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் முறையாகவும், அழகாகவும் வளர வழிகாட்டப்பட வேண்டும் என்றே நினைக்கிறனர். குழந்கைள் பராமரிப்பதற்கு முறையான வழிமுறைகள் இருக்கின்றன. குழந்தை வளர்ப்பது ஒரு ‘கலை’ என்றும் குறிப்பிடப்படுகிறது. சரியான முறையில் குழந்தைகளைப்பராமரிக்க வேண்டும் அல்லது வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசையும் அவாவும் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். குழந்தைகள் கண்குளர்ச்சியைத்தர வேண்டும் என்ற மேலான எதிர்பார்ப்பு எல்லாப்பொற்றோர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் ஆளுக்கால் வேறுபட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

குழந்தை வளர்ப்பு முறையை டயனா பவும்ரின்ட் எனும் மனநூல் அறிஞர் நான்கு விதத்தில் பிரித்துக்காட்டுகிறார்.

1. தன்னிச்சையான முறை

கண்டிப்பான அல்லது விட்டுக்கொடுப்பற்ற குழந்தை வளர்ப்பு முறை. இந்த முறையில் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு கட்டலைகளை, விதிகளை விதிப்பார்கள். பெற்றோரின் கட்டளைகள் மீறப்படும் போது குழந்தைகள் தண்டிக்கப்படுவார்கள். இங்கு பெற்றோருக்கும் குழந்தைகள் இடையில் குறைவான உறவே காணப்படும். கண்டிப்பான முறையில் குழந்தைகள் வளர்க்கும் பெற்றோர்கள் குழந்தைகள் வினாத்தொடுத்து விடயங்களை அறிவதில் பொறுமையாக இருக்க மாட்டார்கள். இவர்கள் குழந்தைகளிடமிருந்து பெரிய அளவு எதிர்பார்ப்பவர்களாக இருக்கும் அதே நேரம் குழந்தைகள் மீதான பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு விளக்கங்கள், ஆலோசனைகள் வழங்குவதைவிட கட்டளையிடுவதும் தண்டனை கொடுப்பதிலும் மும்முரமாக இருப்பார்கள். இது செலிப்பற்ற, பயனற்ற, மூடப்பட்ட குழந்தை வளர்ப்பு முறையாகும். குழந்தைகள் கட்டளைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுக்கமாட்டார்கள். ‘நான் சொல்வதை செய்’ ‘நான் சொல்வதுபோல் இரு’ போன்ற தனிச்சையான கட்டளைகள் பெருமளவிற்கு காணப்படும். இங்கு குழந்தைகள் மகிழ்ச்சி காணாத, பயந்த சுபாவமுள்ள, கவலையுள்ள மனநிலையை அடைவார்கள். மற்றவர்களோடு சேர்ந்து செயலாற்றுவதிலும் தொடர்பாடல் திறன்களைப்பேணுவதிலும் அவதிப்படுவர். அத்துடன் வன்முறைச்செயற்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும், ஒதுங்கியிருக்கும் குழந்தைகளாகவும் மாறுவதற்கு இடமுண்டு.

2. சுதந்திரமான குழந்தை வளர்ப்பு முறை

இது கண்டிப்பு குறைவான, கனிவுநலன் மிக்க, இணிய பாங்குடைய, திட்டவட்டமான குழந்தை வளர்ப்பு முறையாகும். இது ஜனநாயகம் சார்ந்த நிர்வாக முறையையும், பயிற்சியையும் ஒத்ததாக இருக்கும். இங்கு பெற்றோர் அதிகாரத்தை தம் வசம் வைத்துக்கொண்டு குழந்தைகளின் கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் பதில் கொடுப்பதில் பொறுமையுடையவர்களாக இருப்பார்கள். கண்மூடித்தனமாக குழந்தைகள் கட்டுப்பட வேண்டும் என்று விதிகளை முன்வைக்க மாட்டார்கள். கட்டளைகளுக்கும் விதிகளுக்கும் கட்டுப்படுவதன் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் குழந்தைகளுக்கு உணர்த்துவார்கள். இது பொறுப்பும் மேன்மையும் நிறைந்த குழந்தை வளர்ப்பு முறையாகும். தண்டனை வழங்கல் மூலம் குழந்தைகளை வளர்க்கலாம் என்ற எண்ணம் அறவே இருக்காது. பேனி வளர்த்தல் மூலம் சரியான ஆலோசனைகள், அறிவுறைகள் வழங்குவதன் மூலமும் குழந்தைகளுக்கு அழகான வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ள வழி காட்டப்படும்.

பொறுப்பு வாய்ந்த சமூகப்பிரஜையாக தம் குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற உயர்வான மனோநிலையில் பெற்றோர்கள் வழிகாட்டல்களை பொறுப்போடும், பொறுமையோடும் கொடுப்பதில் கரிசனையோடு செயற்படுவார்கள். குழந்தைகள் ‘மேன்மையுடையவரகள்’, ‘உயர்வானவர்கள்’ என்ற உணர்வுடன் எப்பொழுதும் அவர்களுடன் மறியாதையாக நடந்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு சரியான தீர்மானம் எடுக்கவும், சரியான இலக்கை அடையவும் வழிகாட்டுவார்கள். இங்கு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் அழகான உரையாடல்கள், கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்.

இந்த குழந்தைகள் மனநிறைவு கூடிய, இணங்கும் மனப்பாங்குடைய, முன்செல்லக்கூடிய மனநிலையைக்கொண்டவர்களாகவும், அடைவுகளை நோக்காக்கொண்டவர்களாகவும், தம் இலக்குகளை அடைந்துகொள்ள முயற்சிப்பவர்களாகவும் இருப்பார்கள். தடைகள், தாக்கங்கள் மற்றும் சவால்களுக்கு முகம்கொடுத்து ஏனைய அனைவரோடும் சிறந்த உறவை வளர்துக்கொள்வார்கள்.

3. சலுகைகாட்டி குழந்தை வளர்க்கும் முறை

இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சலுகைகளை அல்லது வாய்ப்புக்களைக்கொடுத்து அவர்களாக வளர வாய்ப்பு அழிக்கும் முறையாகும். இங்கு பெற்றோர் குழந்கைகளுக்கு கட்டளைகளை விதித்து அவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றோ அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்வதோ இல்லை. குழந்தைகளாக தீர்மானம் எடுக்கவும் அனுமதிக்கப்படுவர். அவர்கள் ‘சுயகட்டுப்பாட்டில்’ வளர வேண்டும் என்று அல்லது ‘அவர்கள் தாமாகவே வளர்வார்கள்’ என்று நினைப்பார்கள். தம் குழந்தைகள் ஆக்கத்திறனும் சுயநம்பிக்கையும் கொண்டவர்களாக வளர்வார்கள் என நம்புவார்கள்.

இந்தப் பெற்றோர் குழந்தைகளை பேனி வளர்ப்பதுடன் அவர்கள் மீது அக்கரையும் செலுத்தி அதற்குப் பகரமாக குழந்தைகளிடமிருந்து முதிர்ச்சி, பண்பான நடத்தை போன்றவற்றை எதிர்பார்க்கின்றார்கள். கட்டளை இடுவதைவிட பொறுப்பின் அளவு கூடுதலாக இருக்கும். பெற்றோர் குறைந்த கட்டுப்பாட்டையும் கூடுதலான பொறுப்புணர்ச்சியைம் வெளிப்படுத்துவார்கள். குழந்தைகள் வேண்டுவன வற்றை செய்ய முட்படுவார்கள். அளவுக்குமீறிய சலுகைகள் கொடுப்பதால் இந்தக்குழந்தைகளுக்கு தமது எல்லையை வரையறை செய்துகொள்ள முடியாமல் போவதுடன் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவார்கள். சுதந்திரம் கொடுக்கப்படும் எல்லாக்குழந்தைகளும் அதற்குத்தக்கவாறு ஒழுங்காகவும், பொறுப்பாகவும் அதைப்பயன்படுத்துவார்கள் என்று கூற முடியாது. இந்தக்குழந்தைகள் மற்றவர்கள் மீது மறியாதைகாட்ட முடியாதவர்களாகவும் மாறுவார்கள். அத்தோடு அவர்களது நடத்தைகளை ஒழுங்கமைத்துக்கொள்வதிலும் சங்கடங்களை எதிர்கொள்வார்கள்.

4. அலட்சியமான குழந்தை வளர்ப்பு முறை

இது உதாசீனமான, கவனம் செலுத்தப்படாத புறக்கனிப்புத்தன்மையிலான குழந்தைவளர்ப்பு முறையாகும். பெற்றோர் அவர்களது வாழ்க்கையை குழந்தை முன் நிருத்தி குழந்தை வளர்ச்சியை, வளர்ச்சிக்குத் தேவையானவற்றை புறக்கனித்து விடுவார்கள். இங்கு குழந்தைகள் மீதான தொடர்பு மிகவும் குறைவாக அல்லது அறவே இல்லாததாக இருக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் நெருக்கமான, பயன்தரும் தொடர்பாடல் முறைகளை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார்கள். குழந்தைகள் தாமாகவே வளரட்டும் என கவனயீனமாக இருப்பார்கள். குழந்தைகள் அனாதைகளாக வளர வேண்டும் என்பது இதன் கருத்தல்ல. ஏனைய குழந்தை வளர்ப்பு முறைகளில் உள்ள பொறுப்புணர்வின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். உணவு, உடை, இருப்பிடம் போன்ற சில அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதில் அவதானம் செலுத்துவார்கள். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் நெருக்கம், பாசம் நிறைந்த உறவுகள் இருப்பதில்லை. குழந்தையின் உணர்வுகள், எதிர்பார்ப்புக்கள், ஆசைகள் போன்றவற்றை அறியவோ அவர்களின் விருத்திப்படிமுறை மாற்றங்கள் பற்றித்தெரிந்து கொள்ளவோ குழந்தைகளோடு சேர்ந்து இன்பமாக மகிழ்ந்து உறவாடி, உறையாடி அவர்களின் எழுச்சிக்கு துணைபுரிய கரிசனை கொள்ள மாட்டார்கள். இக்குழந்தைகள் தகுதியற்ற, திறமைகுறைந்த, சுயகட்டுப்பாடு குறைந்த, முதிர்ச்சியற்ற, சுதந்திரமாக செயற்பட இயலாத நிலைக்குத் தள்ளப்படுவர்.

இங்கு குறிப்பிட்ட ஒவ்வொரு குழந்தை வளர்ப்பு முறையும் குழந்தையின் விருத்தியில் பல விதத்தில் செல்வாக்குச்செலுத்துகிறது. இவற்றில் எந்த முறை மிகவும் பயனும் பெருமதியும் உள்ளதென நாம் இலகுவாக புரிந்துகொண்டிருப்போம். எமது வீட்டிலுள்ள குழந்தை வளர்ப்பு முறை இந்நான்கில் எது என்பதனையும் நாம் இனங்கண்டிருப்போம்.

• கண்டிப்பும் கட்டளையும் இட்டு எமக்கு விருப்பமானவாறு குழந்தைகளை வளர்ப்பதா?
• அளவிற்கதிகம் சலுகைகளையும் சுதந்திரத்தையும் கொடுத்து அவர்கள் விருப்பம் போல் வளரட்டும் என வளர விடுவதா?
• உணவு உடை இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை மாத்திரம் கொடுத்து ஏனைய விருத்தி முறைகளில் அலட்சியமாக இருந்து வளரட்டும் என விட்டுவிடுவதா?
• அல்லது ‘நிறைவான வாழ்வை எனக்குத் தாருங்கள்’ என்று மௌனமாக கேட்டும் குழந்தைகளின் வேண்டுகோளை புரிந்து, மதித்து நாமும் நமது குழந்தைகளும் சேர்ந்து கட்டுப்பாடும் கன்னியமும் கலந்த கலந்துரையாடல் மூலமும் உணர்வுகள் பரிமாரப்படுதல் மூலமும் குழந்தை வளர வழிகாட்டுவதா?

இவற்றில் எது சிறந்தது என்பதை ஒவ்வொரு பெற்றாரும் தீர்மானித்துகொள்வார்கள்.

ஒரு தாயின் அல்லது தந்தையின் துணையால் மட்டும் ஒரு சிறந்த பிரஜை உருவாக்குவது இலகுவானதல்ல. இருவரின் ஒத்துழைப்பினாலும் குழு ஒருமைப்பாட்டாலுமே இதை இலகுவாக அடைந்து கொள்ள முடியும். வீட்டிற்குள் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள், பயிற்சிகளும்தான் சமூகத்தில் குழந்தையை எவ்வாறான ஒருவன் என்பதை தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன. அமைதி, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல், சேர்ந்து செயலாற்றுதல், அழகான சிந்தனைகள், அறிவு தேடல், கலந்துரையாடல் போன்ற மிக உயர்வான மானிடப்பன்புகள் எமது வீடுகளை அலங்கரிக்குமானால் மேன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்த மனிதர்கள் வாழும் பூங்காவனமாக எமது வீடுகள் அமைந்து விடும்