Recents in Beach

சரும குறைபாட்டை போக்கி இளமை தோற்றம் தரும் தேன்



சிறு சிறு தேன் துளிகள் சருமத்தைப் பராமரிக்கும் பணியினை ஆச்சரியப்படத் தக்க வகையில் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது வரை பருகும் தேநீரில் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்தியிருப்பீர்கள். இப்போது அழகுப் பராமரிப்பிற்கு தேனைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி, அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி, அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது.
மேலும் இந்த தேன் சருமத்திற்கான பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப் பிற்கான அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, பண்டைக் காலத்திலிருந்து சிறந்த உணவுப் பெருளாக பயன்படும் தேன் தற்போது, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் பயன்படுகிறது.
மொத்தத்தில் அழகுப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக தேன் இருக்கும். இப்போது கூந்தல் பராமரிப்பிற்கும், சருமப் பராமரிப்பிற்கும் சில தேன் கலந்த வீட்டுக்குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திப் பாருங்கள்.
கூந்தலுக்கு :
சிக்கலற்றபட்டுப் போன்ற கூந்தல் வேண்டுமா? அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில் கூந்தல் எண்ணெய் பசையின்றி பட்டுப்போல மென்மையாக இருக்க வேண்டுமா? அப்படியாயின் இம்முறையைப் பயன்படுத்திப்பாருங்கள்.
ஒரு கிண்ணத்தில், இரண்டு மேசைக் கரண்டி தயிர், இரண்டு முட்டைகள் (வெள்ளைக்கரு மட்டும்), எலுமிச்சைச் சாறு, ஐந்து துளி தேன் ஆகியவை கலந்து கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் அரை மணிநேரம் கழித்து, தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். இதனால் கூந்தலானது பட்டுப்போல மென்மையாகி இருப்பதைக் கவனிப்பீர்கள்.
பளபளப்பான கூந்தலுக்கு :
தேனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து கூந்தல் மீது தடவி, சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் அலசினால், கூந்தல் பளபளப்புடன் இருப்பதைக் காண முடியும்.
பருக்கள்  :
சிலரது சருமம் எளிதில் பருக்கள் உருவாவதற்கு வசதியானதாக இருக்கும். பருக்கள் நிறைந்த சருமம் உண்மையிலேயே பராமரிப்பதற்கு கடினமானது தான். பருக்களைப் போக்குவதும் கடினமான காரியம் தான். எனவே வீட்டில் உள்ள மசாலா பொருள்களில் ஒன்றான பட்டையையும் சிறிது தேனையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் இதனை பருக்களின் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விடுங்கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள். பருக்களைப் போக்குவதற்கு இது சிறப்பான ஒரு வீட்டு மருத்துவம்.
கலப்பட தேனுக்கான அறிகுறிகள்  :
மார்க்கெட்டில் மிக எளிதாகக் கிடைக்கும் பொருள் தான் தேன் என்றாலும், அது தரமான தேனா என்று பார்த்து வாங்குங்கள். தேனில், வெல்லப்பாகு அல்லது சர்க்கரைப்பாகு அல்லது சில சமயங்களில் தண்ணீர் கலந்தும் கலப்படமான தேன் விற்கப்படுகிறது.
கலப்படம் செய்யப்பட்ட தேனில் இயற்கையான மருத்துவக் குணங்கள் இருப்பதில்லை. ஆகவே தேனை வாங்கும் போது கவனமாக இருங்கள். சுத்தமான தேனா அல்லது கலப்படம் செய்யப்பட்ட தேனா என்று சோதனை செய்ய ஒரு எளிய வழி, அதனை உறைய வைத்துப் பார்ப்பது ஆகும்.
அதற்கு வாங்கிய தேனை, வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைத்திருந்து எடுத்துப் பாருங்கள். சுத்தமான தேன் என்றால், அதே பிசுபிசுப்புடன் பாகு நிலையிலேயே இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன் என்றால், உறைந்திருக்கும். வீட்டு தேன் பாட்டிலைச் சுற்றி எறும்புகள் மொய்க்கின்றனவா?
அப்படியென்றால் அது கலப்படமான தேன். சுத்தமான தேன் எறும்புகளை அண்டவிடாது. சிறிது நாள் கழித்து தேன் படிகங்களாக அடியில் படிகிறதா? அப்படி யென்றால், அது கலப்படமான தேன் ஆகும். ஏனெனில் அதில் சர்க்கரைப்பாகு கலக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.
தேன் வாங்கும் போது மேற்கூறிய சோதனைகளைச் செய்து பார்த்துக் கவனமுடன் வாங்குங்கள். தேனின் மருத்துவக் குணங்களைப் பெறுங்கள். நல்ல தேனை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்றால், அந்தக் கம்பெனித் தயாரிப்புகளையே தொடர்ந்து வாங்குங்கள்.