Recents in Beach

உடல் சூட்டை தணிக்கும் மருத்துவ


நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்கள், வயல்வெளிகளில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அருகம்புல், கீழாநெல்லி, கற்பூரவல்லி, ஆவாரை ஆகியவற்றை கொண்டு உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருந்துகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அருகம்புல், கீழாநெல்லியை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், கீழாநெல்லி, பனங்கற்கண்டு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதில், அருகம்புல்லை துண்டுகளாக்கி போடவும். கீழாநெல்லி இலை, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர உடல் உஷ்ணம் தணியும். உடல் எரிச்சல் இல்லாமல் போகும். சிறுநீர் தாரளமாக வெளியேறும். உடல் சீர்பெறும்.
எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல்லில் அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன. இது, ரத்தத்தை சீர் செய்யும். இதில் புரதச்சத்து, விட்டமின் சி அதிகமாக உள்ளது. கீழாநெல்லி கல்லீரலை பலப்படுத்தும். பித்தத்தை சமன்படுத்தி உஷ்ணத்தை குறைகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி உடல் வெப்பத்தை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம். 
தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, மாதுளை இலை, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு ஆவாரம் பூ சேர்க்கவும். இதில், மாதுளை இலைகளை சிறு துண்டுகளாக்கி போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை, வடிகட்டி குடித்துவர கைகால் எரிச்சல், கண் எரிச்சல், உடல் எரிச்சல் சரியாகும். உடல் வெப்பம் தணியும். உடலில் உஷ்ணம் அதிகரித்தால் தோல் வறண்டு போகும். தோலில் சுருக்கம், நிறம் மாறுதல், நாவறட்சி, சிறுநீர்தாரையில் எரிச்சல் போன்றவை ஏற்படும். இதற்கு ஆவாரம் பூ, மாதுளை இலை தேனீர் மருந்தாகிறது. இது, சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. உடலுக்கு குளிர்ச்சி, பொலிவு தரும்.
காய்ச்சலின்போது ஏற்படும் வெப்பத்தை தணிக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை.
செய்முறை: கற்பூரவல்லி இலையை நீர்விடாமல் அரைத்து சாறு சிறிதளவு எடுக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்க்கவும். சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்றாக கலக்கவும். சர்க்கரை கரைந்த பின்னர் இதை துணியில் நனைத்து நெற்றியில் பற்றாக போடும்போது, காய்ச்சலால் ஏற்படும் வெப்பம் தணியும். உடல் வெப்பம் அதிகமாகும்போது கண் எரிச்சல், தலைவலி, நாக்கு வறண்டு போகும் நிலை ஏற்படும். இதற்கு கற்பூரவல்லி மருந்தாகிறது. 
இதனால், தலையின் உஷ்ணம் குறையும். காய்ச்சலின் தன்மை குறையும். தலைவலி, கண் எரிச்சல் மறைந்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் மேல்பற்றாக விளங்குகிறது. வறட்டு இருமல், மூச்சிரைப்புக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் கரிசாலை, அதிமதுரம், நல்லெண்ணெய். செய்முறை: மஞ்சள் கரிசாலை கீரையின் சாறு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரம் சேர்த்து நல்லெண்ணெயில் இட்டு குழைத்து தினமும் ஒருமுறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் தணியும். வறட்டு இருமல், மூச்சிரைப்பு பிரச்னைகள் சரியாகும்.