Recents in Beach

Aids - எச்ஐவி பரவினால் என்னாகும்?.. உடலுக்குள் என்னென்ன நடக்கும்??




சென்னை: எச்ஐவி எனப்படும் வைரஸ் கிருமி எப்படி பரவுகிறது. அந்த கிருமி உடலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது, அது எய்ட்ஸாக மாறுவது எப்போது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எச்ஐவி எனப்படும் நோய் தொற்றானது பல்வேறு காரணிகளால் பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு, எச்ஐவி பாதிப்புக்குள்ளான ரத்தம் செலுத்துவது உள்ளிட்டவை அதில் சில. எச்ஐவியானது இரு வகைகளை (எச்ஐவி 1, எச்ஐவி 2) கொண்டது. இந்தியாவில் எச்ஐவி 1 பரவலாக காணப்படுகிறது.

எச்ஐவி வைரஸானது உடலில் பரவிய பின்னர் 2 அல்லது 3 மாதங்களுக்கு பின்னரே அறிகுறிகளைக் காட்ட ஆரம்பிக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலமாகும் இது எய்ட்ஸ் நோயாக மாற. நோய்க்கான அறிகுறிகள் தலைவலி, காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி, வாய் மற்றும் பிறப்புறுப்பில் புண்கள், வயிற்றுப் போக்கு, இரவில் கடும் வியர்வை, மூட்டு வலி ஆகியன சாதாரண அறிகுறிகள்.


கடும் அறிகுறிகள்
தலை வலி, பார்வை குறைபாடு, இருமல் மற்றும் மூச்சடைப்பு, நனைக்கும் அளவுக்கு வியர்வை, பல வாரங்களுக்கு 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல், எடை குறைவு, களைப்பு, தோலில் சொறிகள் ஆகியன கடும் அறிகுறிகளாகும்.


குழந்தைக்கு பரவும்
இந்த நோய் எப்படியெல்லாம் பரவுகிறது? எச்ஐவி பாதித்த ரத்தத்தை ஒருவருக்கு செலுத்தும்போது அந்த வைரஸும் ரத்தம் பெறுவோர் உடலில் கடத்தப்படுகிறது. நோய் தொற்றுள்ள ரத்தம் கொண்ட ஊசி மூலம் மற்றவருக்கு கடத்தப்படும். தொற்றுள்ளவருடன் உடலுறவு கொள்ளும் போது பெரும்பாலும் இந்த நோய் கடத்தப்படுகிறது. எச்ஐவி தொற்றுள்ள தாய் மூலம் அவரது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் கடத்தப்படுகிறது. அது போல் குழந்தைக்கு பாலூட்டும் போதும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது.


எய்ட்ஸ் நோயாளி
எச்ஐவியானது நமது ரத்தத்தில் உள்ள சிடி 4 என்ற வெள்ளையணுக்களை காலி செய்து விடும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அழிந்து போய் விடுகிறது. ஆரோக்கியமான ஒருவருக்கு 500 முதல் 1000-க்கு மேல் சிடி 4 இருக்கும். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 200-க்கும் குறைவாக இருக்கும்.


வெள்ளையணுக்கள்
சிடி 4 எண்ணிக்கை என்பது ரத்தத்தில் உள்ள ஒரு வகை வெள்ளையணுக்களாகும். இந்த வெள்ளையணுக்கள்தான் நம் உடல் முழுவதும் பாய்ந்தோடி ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் உடலுக்குள் புகும் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் காவலர்கள் ஆகும். இதிலேயே எச்ஐவி வைரஸ் கை வைப்பதால்தான் நமது உடல் பாதிப்பை சந்திக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும்போது எளிதாக பல்வேறு வியாதிகளும் நம்மைத் தாக்கி நம்மை பலவீனப்படுத்தி இறுதியில் மரணத்திற்கு இட்டுச் செல்கின்றன. இந்த சிடி 4 எண்ணிக்கையை பொருத்தே எய்ட்ஸ் நோயாளியின் வாழ்நாள் காலத்தை கணக்கிட்டு கொள்ளலாம்.


வாழ்நாள் அதிகரிக்கும்
எய்ட்ஸ் நோயை ஆன்டி ரெட்டிரோ வைரல் தெரபி மூலம் கட்டுப்படுத்தலாம். இந்த தெரபி மூலம் சிடி 4 எண்ணிக்கை குறையாமல் பார்த்து கொள்ளலாம். ஆன்டி ரெட்டிரோ வைரல் எனப்படும் ART தெரபி எனப்படுவது எய்ட்ஸ் பாதித்த அனைவருக்கும் கொடுக்கப்படும். இந்த மருந்து எச்ஐவி நோயை முற்றிலும் குணப்படுத்தாது. ஆனால் நோயாளியின் வாழ்நாளை அதிகரிக்கும்.


கஷ்டம்
இந்த தெரபி எச்ஐவி பரவுவதையும் தடுக்கும். சிடி 4 எண்ணிக்கையை குறைப்பதை ஏஆர்டி தெரபி கட்டுப்படுத்தும். நோய் பன்மடங்கு பரவுவதை தடுக்கும். எச்ஐவி பாதிப்புள்ளவர்கள் சிகிச்சையை உடனே தொடங்கினால் அது எய்ட்ஸாக மாறுவதை தடுக்க முடியும். இத்தகைய துயரமான ஒரு கஷ்டத்தைத்தான் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அப்பாவி கர்ப்பிணிக்கு ரத்த வங்கி ஊழியர்கள் கொடுத்து மக்களை அதிர வைத்துள்ளனர்.