Recents in Beach

எலும்புகளின் ஆரோக்கியம் குலைக்கும் விஷயங்கள்


எலும்புகளின் நலன் காக்க பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. உணவியல், உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றங்கள் என்று கூறுவதைப் போலவே எலும்புகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பல தவறுகளை அறிந்துகொள்வதும் அவசியம். அப்படி எலும்புகளின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்...

அளவுக்கதிக உப்பு
சிலருக்கு உணவில் எப்போதும் ஒரு கல் உப்பு தூக்கலாக இருந்தால்தான் இறங்கும். அது தவிர உட்கொள்ளும் மற்ற உணவுகளின் மூலம் உள்ளே போகிற அதிக உப்பு சத்தை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. உதாரணத்துக்கு சிப்ஸ், ஊறுகாய், சாஸ், சீஸ், பிரெட், பிஸ்கட் என பல உணவுகளிலும் அதிக உப்பு சேர்க்கப்படும். இப்படி உணவில் உப்பின் அளவு அதிகமானால் கால்சியம் அளவு குறையும். 
அதன் மூலம் எலும்புகளின் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படும். உப்பே இல்லாமல் உண்பது யாருக்கும் சாத்தியமாகாது. ஆனால், உப்பின் அளவை குறைத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு உப்பின் அளவு 2300 மி.கி அளவை தாண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
டி.வி மற்றும் கம்ப்யூட்டர் முன் அளவுக்கதிக நேரத்தை செலவிடுவது
இதற்கும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணி நேரங்களை டி.வி அல்லது கம்ப்யூட்டர் முன்னாடி செலவழிக்கிறபோது உங்களுக்கு உடல் இயக்கமே இல்லாமல் போகிறது. உடலுக்கு இயக்கம் இல்லாதபோதும், உடற்பயிற்சிகள் செய்யாதபோதும் எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நடக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். உட்கார்ந்த இடத்திலேயே பல மணி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
இருட்டறையில் அதிக நேரம்
எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையே வைட்டமின் டி சத்துதான். அது சூரிய வெளிச்சத்தின் மூலம் மட்டும்தான் கிடைக்கும். வைட்டமின் டி போதிய அளவு இருந்தால்தான் எலும்புகளுக்கு கால்சியம் கிடைக்கும். எனவே, தினமும் 15 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் உங்கள் உடலில் பட வேண்டும். ஏசி அறையில் இருப்பது, ஏசியிலேயே வேலை செய்வது, வெளிச்சமே இல்லாத வீட்டில் வசிப்பது போன்றவை வைட்டமின் டி கிடைப்பதை தடை செய்யும். அதற்காக அதிக நேரம் சூரிய வெளிச்சத்தில் நடப்பதோ, விளையாடுவதோ வேண்டாம். 
அது உடலில் நீர் வறட்சியை ஏற்படுத்தும். செறிவூட்டப்பட்ட தானியங்கள், பால், பாதாம், சோயா போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் ஓரளவு பலனளிக்கும். காரணமின்றி உடல் வலியோ, கை, கால் மற்றும் மூட்டுக்களிலும், இடுப்பிலும் வலி இருந்தால் அது கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்தின் குறைபாட்டுக்கான அறிகுறியாக இருக்கலாம். மருத்துவரிடம் பேசி சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.
எப்போதாவது குடித்தாலும் ஆபத்துதான்
சிலருக்கு வாரத்துக்கு ஒருமுறை குடிக்கிற பழக்கம் இருக்கும். சிலருக்கு நண்பர்களை சந்திக்கிறபோது குடிக்கும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலருக்கு சந்தோஷமோ, சோகமோ எல்லாவற்றுக்கும் குடிக்க வேண்டும். காரணம் என்னவாக இருந்தாலும் நீங்கள் குடிக்கிற ஒவ்வொரு மடக்கு ஆல்கஹாலும் உங்கள் ஆரோக்கியத்தை சிறுக சிறுக அழிக்கும். அவற்றில் முதலிடம் எலும்புகளுக்கு என்பதை மறக்காதீர்கள். குடிப்பழக்கம் கால்சியம் கிரகிக்கப் படுவதை தடுக்கும். இந்த விதியும் ஆண்களுக்கு மட்டுமில்லை, பெண்களுக்கும் சேர்த்துதான்.
மற்ற மருந்துகள்... சிகிச்சைகள்...
நீங்கள் நீண்ட காலமாக வேறு ஏதேனும் பிரச்சனைகளுக்கு சிகிச்சைகள் எடுத்துக் கொள்பவர் என்றால் அந்த மருந்துகள் உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்குமா என மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சிலவகை ஸ்டீராய்டு மருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகளை அரித்து விடும். 
செயற்கை பானங்கள் வேண்டாம்
சிலருக்கு காலையில் எழுந்ததுமே காபி, டீக்கு பதிலாக கோலா பானம் குடிக்கிற வழக்கம் இருக்கும். வேறு சிலருக்கு உணவுடன் ஏரியேட்டட் பானங்கள் குடிப்பது வழக்கம். இன்னும் சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் சோடா வேண்டும். வேறு சிலருக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு காபி குடிக்க வேண்டும். இவை எல்லாமே எலும்புகளின் ஆரோக்கியத்தை குலைக்கிற பழக்கங்கள். இந்த பானங்களில் உள்ள கஃபைன் மற்றும் பாஸ்பரஸ் இரண்டுமே எலும்புகளின் அடர்த்தியை குறைப்பவை. அதே போல அதிக காபி, டீ குடிப்பதையும் தவிர்க்கவும்.
அதிக எடையும் குறைந்த எடையும்
இவை இரண்டுமே எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிப்பவை. உடல் பருமன் என்பது எல்லாவகையான நோய்களையும் வரவேற்று உங்கள் உடலில் நிரந்தரமாக்கும் என்பதை அறிந்திருப்பீர்கள். பருமனானவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் மிக மோசமாக இருக்கும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிற பலரும் உடல்பருமன் பிரச்சனை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதேபோல சராசரிக்கும் குறைவான எடை இருந்தாலும் அது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. 
உங்கள் உடலின் உயரத்துக்கும், எடைக்கும் ஏற்ற பி.எம்.ஐ அளவை விட குறைவாக இருந்தால் உங்களுக்கு மிக எளிதில் ஃபிராக்சர் என்கிற எலும்பு முறிவு ஏற்படும். எலும்புகளின் அடர்த்தி குறையும். சராசரியைவிட எடை குறைவாக, சிறிய உருவம் கொண்டவர் என்றால் மருத்துவரை ஆலோசித்து கால்சியம் சப்ளிமென்ட் தேவையா என தெரிந்துகொள்ளுங்கள். வெயிட் பியரிங் பயிற்சிகளை உடற்பயிற்சி நிபுணரிடம் கேட்டு செய்யுங்கள்.
விழுந்துவிடாமல் பார்த்து கொள்ளுங்கள்
சிறு வயதில் கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வது சகஜம். ஆனால், சிலருக்கு அப்படி விழும்போது பெரிய பாதிப்புகள் இருக்காது. பிற்காலத்தில் திடீரென அதன் விளைவு தெரியலாம். முதுகுவலியாக பிரதிபலிக்கலாம். வயதானவர்கள் விஷயத்தில் இது இன்னும் மோசம். வயதான காலத்தில் கை, கால் இடறி விழுந்தால், அடிபட்டால் குணமாவதில் தாமதம் ஏற்படும். 
எனவே, சிறு வயதில் விழுந்தால் மருத்துவரை பார்த்து எலும்புகளில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்று உறுதி செய்து கொள்வது முக்கியம். அதேபோல வயதானவர்கள் உள்ள வீடுகளில் அவர்கள் நடக்கும்போது, மாடிப் படிகளில் ஏறும்போது, பாத்ரூம்களில் என எங்கேயும் தவறி விழுந்து விடாதபடியான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் அதிகம் உபயோகிக்கும் இடங்களில் கைப்பிடிகள் பொருத்த வேண்டும்.