Recents in Beach

Health Tips Tamil - தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்?

தாய்ப்பால் மகத்துவமா? இது நம்ம சப்ஜெக்ட் இல்லப்பா!” என அடுத்த பக்கத்துக்குப் பயணிக்கும் ஆண்களுக்கு ஒரு கேள்வி...
தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்? , Thaippal kuzhanthaikku evvazhavu mukkiyam?


தாய்ப்பால் மகத்துவம் பகுதி - 1

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

தாய்ப்பால் மகத்துவமா? இது நம்ம சப்ஜெக்ட் இல்லப்பா!” என அடுத்த பக்கத்துக்குப் பயணிக்கும் ஆண்களுக்கு ஒரு கேள்வி...

“ஒரு பெண் மூலமாய் பிறந்து, ஏதுமறியா பச்சிளங்குழந்தையாய் நீங்கள் தவழ்ந்தபோது அவள் மாரில் புகட்டிய பால் மூலம் உயிர் வளர்த்தீர்களா?”

‘ஆம்’ எனில் அவசியம் தொடரவும். இது உங்களுக்கும்தான்.

உயிரூட்டும் தாய்ப்பால் பற்றிய சில அடிப்படை தகவல்கள் மற்றும் தாய்ப்பால் புகட்டுவதன் முக்கியத்துவம் அனைவருக்கும் சென்றடைய உலக சுகாதார இயக்கம், பிரதி வருடம் ஆகஸ்ட் முதல் வாரத்தை “தாய்ப்பால் வாரமாக” கொண்டாடுகிறது. வருடந்தோறும் ஈஷா மருத்துவ மனைகளில் தாய்ப்பால் புகட்டுதல் குறித்த விழிப்புணர்வு கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாய் தாய்ப்பால் குறித்த தகவல்களைப் பகிர்கிறோம்.
தாய்ப்பால் துளிகள்!

    பிள்ளை பிறந்ததுமே (சுகப்பிரசவம்) (அ) அதிகபட்சம் அரை மணிக்குள் (சிசேரியன்) சீம்பால் புகட்ட வேண்டியதுதான் தாயாக நீங்கள் உங்கள் செல்லத்திற்கு அள்ளித்தரும் முதல் கிஃப்ட் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், சீம்பாலில்தான் உச்சபட்ச நோய் எதிர்ப்பு திறன் அளிக்கும் மூலக்கூறுகள் உள்ளன.
    குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவுமே தரக் கூடாது. 6 மாதங்களுக்கு பிறகுதான் பிற உணவுகளை மெல்ல சேர்க்கலாம்.
    6 மாதங்கள் வரை புட்டியில் அடைத்த பசும்பால், டின் பவுடர்கள், ஏன் தண்ணீர் கூட கட்டாயம் தரக் கூடாது.
    குழந்தையின் 18 மாதங்கள் வரை தொடர்ச்சியாய் தாய்ப்பால் புகட்டுவது வாழ்நாள் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
    தாய்ப்பால் சரியான முறையில் கிடைக்க வேண்டுமெனில், குழந்தை தாயின் முலைக் காம்பை முறையாய் பற்றியிருப்பது அவசியம்.

தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகளில் சில:

    கிறுமித்தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, நெஞ்சக சளி, காது வலி/சீழ், மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்கிறது. அப்படி ஏற்படினும், அதன் தீவிரம் மிகக் குறைவாகவே இருக்கும்.
    28 நாள் முதல் 1 வயது வரை ஏற்படும் குழந்தைப் பருவ உயிரிழப்பு பெருமளவு தவிர்க்கப்படுகிறது.
    தாய்ப்பாலில் கிடைக்கும் அபரிமிதமான நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள், குழந்தையின் உணவுக்குழாயில் பாதுகாப்பு கவசமாக படிந்து விடுகின்றன. இதனால், உணவு சார்ந்த அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைந்து, வளரும் பருவத்தில் அனைத்து வகை உணவுகளும் எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, உடல் வளர்ச்சி திடகாத்திரமாக அமைகிறது. இன்றைய தேதியில், பீடியாட்ரீஷியங்களை மொய்க்கும் ‘யங்’ தாய்மார்கள், “என் பிள்ளைக்கு எந்த ஃபுட்டும் ஒத்துக்க மாட்டேங்குது டாக்டர்.. உடம்பு போடவே மாட்டேங்குது” எனும் புலம்பல்களுக்குப் பின் பச்சிளம் பருவத்தில் பிள்ளைக்கு முறையான தாய்ப்பால் உணவு கிடைக்காததே காரணம்.
    குழந்தைப் பருவத்தில் ஏற்படும் சில வகையான கேன்சர்கள், பிற்கால வாழ்வில் ஏற்படும் சர்க்கரை நோய், உடற்பருமன் மற்றும் மனச் சோர்வில் இருந்தும் இதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கிறது.

தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கு உண்டாகும் நன்மைகளில் சில:

    பேறு கால மனச்சோர்வு/ மன அழுத்தம் தொலைகிறது.
    மார்பகப் புற்றுநோயின் வாய்ப்பு அறவே குறையும்
    உடல் ஹார்மோன் நிலையில் சமநிலை ஏற்படுவதால், கர்ப்பப் பை பலமடைந்து சீரான மாதவிடாய் ஏற்பட உதவுகிறது.
    தாய்ப்பால் புகட்டுவதால் (குறைந்தது 6 மாதம் முதல் 18 மாதம் வரை) ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஒரு இயற்கையான கருத்தடை உபாயமாக இருக்கிறது. அடுத்த பிள்ளைப் பேற்றைத் தள்ளிப்போட உதவும்.

மேலே நாம் அடுக்கிய அனைத்தும், நவீன அறிவியலின் ஆய்வு முடிவுகள். ஆனால், ஆய்வுக்கும் அப்பாற்பட்டு, ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையிலான உணர்வு ரீதியான தொடர்பை வாழ்நாள் முழுதுமே வலுப்படுத்தும் வல்லமை குழந்தைப்பருவ தாய்ப்பாலுக்கு உண்டு என்பது பத்து பிள்ளை பெற்ற நம் பாட்டிகள் தலைமுறை அனுபவமாய் அறிந்த உண்மையே!
இயற்கை தந்த அமுதம்!

ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் பெண்களிடத்தில் அதிகம் இருப்பதாலும், டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோன் ஆண்களிடத்தில் அதிகம் இருப்பதாலும்தான், பருவ காலத்தில் பால் சுரப்பிகளின் வளர்ச்சி பெண் பிள்ளைகளுக்கு மட்டும் ஏற்படுகிறது.

அதே போல், கர்ப்ப காலம் முழுதும் ப்ரொஜெஸ்டெரோன் எனும் ஹார்மோன் உச்சநிலை பெறுவதால் பால் சுரப்பிகளின் வளர்ச்சி கர்ப்ப காலத்தில் அபரிமிதமாக ஏற்பட்டு பால் சுரக்க தயார் நிலையை அடைகிறது.

இறுதியில், பிள்ளை பேறுக்குப் பின் ப்ரொலாக்டின் எனும் ஹார்மோன் சரியான சமயத்தில் தாயின் இரத்தத்தில் உயர்வதால்தான் குழந்தையின் உயிர் அமுதமாய் தாய்ப்பால் சுரக்கிறது.
பிறந்த குழந்தைக்கு அத்தியாவசிய தேவை இரண்டு...

    நோய் எதிர்ப்பாற்றல் (Immunity)
    சுவாசம், இருதய துடிப்பு, ஜீரண மண்டல செயல்பாட்டுக்கு தேவையான சக்தி (Energy)

தாய்ப்பாலின் சத்துக்களை சற்று ஆராய்ந்து பார்த்தால் அதன் ஒவ்வொரு சிறிய அம்சமும்கூட குழந்தையின் இந்த இரு தேவைகளை கனகச்சிதமாக நிறைவேற்றுவதாகவே இருக்கிறது.

மேலும், குழந்தை கருவிலிருந்து வெளியேறிய அடுத்த கணமே தாய் தன் மாரோடு அனைத்து பால்புகட்ட நவீன அறிவியல் அறிவுறுத்துகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஆச்சரியம் யாதெனில், உள்ளபடி தாய் பால் புகட்டுகிறாள் என்பதை விட, தாய் மயக்க நிலையில் பால் புகட்ட முடியாமல் இருந்தாலும் குழந்தை தானே உறிஞ்சுகிறான் என்பதே உண்மை. எந்த ஒரு பழக்கப்படுத்துதல் மற்றும் பயிற்சி இல்லாமலேயே பால் உறிஞ்சும் திறனை (sucking reflex) ஒவ்வொரு குழந்தையின் DNAவிலேயே பொதித்து வைத்திருக்கும் இயற்கையின் பேரறிவை மெச்சத்தானே வேண்டும்!

ஒரு குறைமாதக் குழந்தை பெற்ற தாயின் பாலுக்கும், நிறைமாதத்தில் ஈன்ற தாயின் பாலுக்கும் கூட வித்தியாசங்கள் உண்டு. ஏனெனில், குறை/நிறை மாத குழந்தைகளின் உடலியல் தேவைகள் வெவ்வேறு. ஒவ்வொரு முறை பால் புகட்டப்படும்போதும், முதல் சில மில்லி பால் அதிக நீர்த்தன்மையுடன் குளுக்கோஸ் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கும் நொதிகளை அள்ளித் தருகிறது. இவை ஒரு குறிப்பிட்ட அளவு சுரப்பிகளில் இருந்து குழந்தைக்கு சென்றடைந்த பின்னரே அதிக கெட்டித்தன்மையுடன் கொழுப்பு சத்து நிறைந்த பால் சுரக்கிறது. இது ஏனெனில், உயிர் வாழ உடனடி மற்றும் அத்தியாவசிய தேவை குளுக்கோசும், நோய் எதிர்ப்பாற்றல்தான் அல்லவா? உடல் வளர உதவும் கொழுப்பு சத்து முன்னால் வர வேண்டிய அவசியம் இல்லையே! பால் சுரக்கும் தன்மையில்கூட இயற்கையின் ஆற்றல் அதிசயம்தான்! ஆகவேதான், தாய்மார்கள் ஒவ்வொரு முறை பால் புகட்டும்போதும், ஒரு மார்பில் முழுமையாய் பால் கொடுத்த பின்னரே அடுத்த மார்பில் புகட்ட வேண்டும். சமச்சீரான வளர்ச்சிக்கு இந்த நடைமுறை அவசியம்.
தாய் எனும் அற்புத உயிர்:

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

இந்த வாக்கு பொதுவாக நன்றி மறவாமைக்காக கூறப்படுவது. ஆனால், இதற்கும் ஒரு படி மேலாய் இவ்வாக்கிற்கு உண்மை சாட்சியாய் நிற்பது ஒரு தாயவளின் முலைப்பாலே! ஏனெனில், ஒரு தாயாய் ஒரு பெண் தன் குழந்தைக்கு அளிக்கும் முதல் உண்டிதானே அக்குழந்தையின் உயிரையே காக்கிறது? இதைப் படிக்கும் வளர்ந்த குழந்தைகள் (நீங்கதாங்க...) உங்களை அந்தச் சூழ்நிலையில் இருத்தி உருவகப்படுத்திப் பாருங்கள். உங்கள் தாய் என்கிற அந்த அற்புத உயிரின் மேல் ஒரு நன்றியுணர்வு அனிச்சையாகவே ஏற்படும்!
குழந்தையைக் குழப்பாதீர்!

பொதுவாக தாயின் முலைக்காம்பை பற்றிய குழந்தை தன் தாடையை வலுவாய் அசைப்பதன் (Active Sucking) மூலம் மட்டுமே அவனுக்கு பால் கிடைக்கிறது. ஆனால், இந்த புட்டிகளின் ரப்பர் மூலம் பால் தானாகவே சொட்டுவதால், பிள்ளை தன் தாடையை அசைக்க தேவை இல்லை. ஹாயாக பொக்கை வாயை திறந்தாலே போதும், அவன் பசி அடங்கும். இதனால், ஒரு முறை புட்டிக்கு அவனைப் பழக்கப்படுத்தினால், தாயின் மாரிலும் அவன் பால் தானாக வரும் எனத் தாடை அசைவு ஏற்படுத்தாமல் இருப்பதால் பால் கிடைப்பதில்லை. இதனை மருத்துவ மொழியில் Nipple Confusion என்போம். ஆதலால், புட்டிகளை பணம் கொடுத்து வாங்கும்போது தாய்/சேய் இருவருக்குமே மன குழப்பத்தையும் விலைக்கு வாங்குகிறீர்கள் என அர்த்தம்.

    1 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற கிருமித் தொற்றுகளில், 90 சதத்திற்கும் மேல் ஏற்பட காரணம் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாத புட்டிகளே என்பதை நினைவில் வையுங்கள்.
    சுத்தப்படுத்தும் முறை: ஒவ்வொரு முறை பிள்ளை புட்டிப் பால் அருந்தும்போதும் புட்டி. அதன் ரப்பர், உள் மூடி, வெளி மூடி என அனைத்தும் 100 டிகிரி கொதி நீரில், குறைந்தது அரை மணி நேரம் கொதிக்கவைக்க வேண்டும். “இப்ப பாதி சாப்பிடுவான்.. அரை மணி கழிச்சு பாதி சாப்பிடுவான். அதையும் மிச்சம் வெச்சான்னாலும் சாயங்காலம் மீதிய சூடு பண்ணி அதே பாட்டில்ல குடுப்பேன்” என்கிற தாய்மார்களே உஷார்! உங்கள் பிள்ளையின் பேதிக்கு நீங்களே கூட காரணம் ஆகலாம்!
    ஆக, புட்டியை முறையாய் உபயோகிக்கவும் அல்லது தேவையெனில் எவர்சில்வர் சங்கு/கிண்ணம் பயன்படுத்துவதையே அறிவுறுத்துகிறோம்.