Recents in Beach

பாதுகாப்பான தொடுகை & பாதுகாப்பற்ற தொடுகை பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேச சில குறிப்புகள் (Tips to Talk to Your Child about Safe and Unsafe Touches)


இது மிகவும் சிக்கலான கருத்து, அதே சமயம் கண்டிப்பாகப் பேச வேண்டிய கருத்து. உங்கள் குழந்தை எப்போதுமே பாதுகாப்பாகவே இருக்கிறார் என்று தெரியும் என்பதால், இதைப் பற்றி குழந்தையிடம் பேசுவதைத் தவிர்த்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், அதை நீங்கள் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். தற்கால நிலவரம் அதைத்தான் சுட்டுகிறது. இந்தியாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சுமார் 53% குழந்தைகள் (ஆண் மற்றும் பெண் குழந்தைகள்) ஏதோ ஒரு வடிவத்திலான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள்.

அதற்காக எப்போதும் வீட்டிலேயே குழந்தையை பூட்டி வைக்க முடியுமா?! அதுவும் தீர்வல்ல. இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க சரியான தீர்வு எப்போதும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதுதான்.

இந்த விஷயத்தைப் பற்றி குழந்தைகளிடம் பேசுவதற்கு உதவும் சில குறிப்புகள் இதோ:

இதைப் பற்றிப் பேசும்போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்:
சொற்களைத் தேர்ந்தெடுத்தல் (Wording)
      இதைப்பற்றிப் பேசும்போது, 'நல்ல', 'கெட்ட' என்ற சொற்களுக்குப் பதிலாக 'பாதுகாப்பான' பாதுகாப்பற்ற' என்ற சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். உடலின் குறிப்பிட்ட பாகங்களைத் தொடுவது பற்றிப் பேசும்போது, 'நல்ல தொடுகை' 'கெட்ட தொடுகை' என்று நாம் குறிப்பிட்டுப் பேசினால், அவர்கள் வளரும்போது பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் ஆகிய கருத்துகளைப் புரிந்துகொள்வது கடினமாகிவிடலாம்.
உடல் பாகங்கள் (Body parts)
       சில பெற்றோர், உள்ளாடைகளால் மூடியிருக்கும் உடல் பாகங்களை, பெற்றோர் அல்லது மருத்துவர்கள் (பெற்றோர் முன்னிலையில்) தவிர வேறு யாரும் தொடக்கூடாது என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பார்கள். இன்னும் சில பெற்றோர், அந்தந்த உடல் பாகங்களின் உண்மையான பெயரையே பயன்படுத்துவார்கள், இதனால் குழந்தைகள் அவற்றைப் பற்றிப் பேசும்போது ஏற்படும் தயக்கம் குறையும் என்று கருதுவார்கள். குழந்தையின் உடல் பாகங்களை மற்றவர் தொடுவதைப் பற்றிப் பேசும்போது, பிறரது அந்தரங்க உறுப்புகளை அவர்கள் தொடுவதும் தவறு என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியம்.
அவர்களின் உடல் மீதான உரிமை (Ownership of their Body)
      அவர்களின் உடல் அவர்களுக்கு சொந்தமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், அவர்களுக்கு விருப்பமில்லாமல் யாருமே அவர்களின் உடலைத் தொடக்கூடாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் பற்றி பெற்றோர் விளக்கிக்கூறி புரியவைக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், யாரேனும் அவர்களைக் கட்டி அணைப்பதை அல்லது முத்தமிடுவதை அவர்கள் மறுக்கலாம், அதற்குத் தயங்க வேண்டியதில்லை என்று அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
நேரம் (Timing)
      இதைப் பற்றிப் பேச சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது, பேச்சை இயல்பாக்க உதவும். உதாரணமாக குழந்தையை குளிக்க வைக்கும்போது அல்லது உடை மாற்றிவிடும்போது இதைப்பற்றிப் பேசலாம். இதைப்பற்றிப் பேசி, குழந்தை பயந்துவிடும்படி செய்துவிட வேண்டாம். தெளிவின்றிப் பேசக்கூடாது, அவர்களைப் பயமுறுத்த முயற்சிக்கக் கூடாது. முக்கியமான கருத்துகளை மீண்டும் மீண்டும் கூறலாம், குழந்தைகள் கேள்வி கேட்க ஊக்குவித்து, அவர்கள் சந்தேகங்களுக்கும் பதிலளிக்க வேண்டும்.
மறுப்பது தவறல்ல (It's okay to say 'NO. ')
       குழந்தைக்கு, நன்கு தெரிந்த, நம்பகமானவர்களே முறையற்ற வகையில் தொடும்போது, குழந்தைக்கு குழப்பமாக இருக்கலாம். குழந்தைகளிடம், அந்த உடல் அவர்களுக்குச் சொந்தமானது, வேறு பெரியவர்களோ, குழந்தைகளோ கூட 'பாதுகாப்பற்ற' வகையில் தொட்டால், அதை மறுக்கலாம் என்று அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அப்படி மறுத்த பிறகு அவர்கள் ஏதேனும் செய்தால், உடனடியாக உதவிக்காக சத்தமிட வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
இரகசியமாக எதுவும் வேண்டாம் (No Secret)
        இப்படி குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்பவர்கள், பெரும்பாலும் இது இரகசியம், யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறுவார்கள். ஏதேனும் தவறாகத் தெரிந்தால், அப்படித் தோன்றினால், அது இரகசியமானது போல் இருந்தாலும், உங்களிடம் அதைப்பற்றிக் கூற வேண்டும் என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். உடலில் ஏதேனும் இரகசியமாக செய்ய வேண்டும் என்று யார் கூறினாலும் அது தவறு என்று குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும்.
படம்பிடிப்பது (No pictures)
       தொடுவது மட்டுமே பாலியல் ரீதியாக தகாத நடத்தையில் ஈடுபடுவது என்றாகாது, தங்கள் அந்தரங்க உறுப்புகளை எவரும் படம்பிடிக்கவும் அனுமதிக்கக்கூடாது என்று குழந்தைகளிடம் கூறிவைக்க வேண்டும்.

நீங்கள் செய்யக்கூடியவை (Things you can do)
அந்நிய மனிதர்களை பணியமர்த்தும்போது மிகுந்த கவனம் தேவை (Check and double-check references)
       குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள நீங்கள் பணியமர்த்தியவர்களை நம்பி, குழந்தைகளை அவர்களிடம் விடும் முன்பு, அவர்களை நன்கு கண்காணித்து முடிவு செய்ய வேண்டும். தெரிந்தவர்கள் பரிந்துரையை வைத்து, இதற்காக நபர்களைத் தேர்வு செய்வது நல்லது. அதுமட்டுமின்றி, முடிந்தால் எப்போதும் நீங்களும் அவ்வப்போது அவர்கள் எப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள் என்று கவனித்துக்கொண்டு இருப்பது நல்லது.
உங்கள் குழந்தைகளைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள் (Know who is around your child)
      குழந்தை பக்கத்து வீட்டில் இருந்தாலும், குடும்ப நண்பருடன் வெளியே சென்றாலும், குழந்தையைச் சுற்றி யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தே இருக்க வேண்டும்.
(அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் (Look for signs)
      யாரேனும் ஒரு நபர், உங்கள் குழந்தை மீது அதிக கவனம் செலுத்துவதை நீங்கள் கவனித்தால், அவரைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், அவர் ஏதேனும் செய்தாரா என்று கூட குழந்தையிடம் விசாரித்துப் பார்க்கலாம். குழந்தை ஒரு நபர் அல்லது குழந்தையிடம் அதிகமாக வெட்கப்பட்டு விலகிச் சென்றால், அதுவும் கூட ஏதேனும் தவறு நடந்திருப்பதன் அடையாளமாக இருக்கலாம், அதையும் கண்டுகொள்ளாமல் விட வேண்டாம்.
குழந்தைகள் உங்களிடம் எதையும் கூறும்படி நடந்துகொள்ளுங்கள் (Be approachable)
    எப்போது ஏதேனும் அசௌகரியமாக இருந்தாலும், உங்களிடம் கூறலாம், கூற வேண்டும் என்று குழந்தைகளுக்குக் கூறுங்கள். ஏதேனும் பார்ட்டியில் இருந்தாலும், வேறு உறவினர் வீடுகளுக்குச் சென்றிருக்கும் போதும் கூட அவர்களுக்குப் பாதுகாப்பில்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டால், உங்களிடம் உடனடியாக அவர்கள் பேசும்படி நீங்கள் அருகில் இருக்க வேண்டும். இது தவறு, செய்யக் கூடாதது, இதைப் பற்றிப் பேசக் கூடாது என்பது போல் இதைப்பற்றி நீங்கள் பேசினால், அதைப் பற்றி உங்களிடம் பேசவே அவர்கள் தயங்கி சிலவற்றை சொல்லாமல் தவிர்க்கும் அபாயமுள்ளது.

அமைதியாக நடந்துகொள்ளுங்கள் (React calmly)
     எப்போதாவது, உங்கள் குழந்தைக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அல்லது துன்புறுத்தல் நடந்துள்ளது என்று நீங்கள் சந்தேகப்பட்டால் அல்லது உங்கள் குழந்தை உங்களிடம் வந்து யாராவது தன்னை தகாத விதத்தில் தொட்டார்கள் என்று கூறினால், அவர்கள் முன்பு, கோபமாகவோ, வருத்தமாகவோ இருப்பது போன்று காட்டிக்கொள்ளக் கூடாது. இப்படிச் செய்தால், அவர்களுக்கு ஒருவித குற்ற உணர்வு உண்டாகலாம், இனி இது போன்ற விஷயங்களைப் பற்றி உங்களிடம் சொல்லக்கூடாது என்று அவர்கள் முடிவெடுத்துவிடலாம். அது மிகவும் ஆபத்தானது. முதலில், என்னிடம் வந்து கூறியது நல்லது என்று அவர்களைப் பாராட்டி, அமைதிப்படுத்த வேண்டும், இதை நான் பார்த்துக்கொள்கிறேன், கவலைப்பட வேண்டாம் என்று சமாதானம் செய்ய வேண்டும்.

இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க பல வழிகள் உள்ளன . இதைப் பற்றிப் பேசுவது எவ்வளவு கடினமாக இருந்தாலும் , பேச நீங்கள் உங்களைத் தயார்செய்துகொள்ளத்தான் வேண்டும் .