Recents in Beach

உடல் எடை அதிகரிக்க தினமும் பிரெட் சாப்பிடுவதும் ஒரு காரணம்!

உடல் எடை அதிகரிக்க தினமும் பிரெட் சாப்பிடுவதும் ஒரு காரணம்!


காலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதைவிட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது. அமர்ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எது கிடைக்கிறதோ அதுதான் உணவு. அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப்பொருள், பிரெட். சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு. ``தினமும் பிரெட் சாப்பிடுவதால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்" என்கின்றனர் மருத்துவர்கள்.

`சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்' (Centre for Science and Environment - CSE) சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பிரெட்டில் `பொட்டாசியம் புரோமேட்' (Potassium Bromate), `அயோடேட்' (Iodate) போன்ற ரசாயனங்கள் சேர்ப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரெட் ஆம்லெட், பட்டர் அல்லது ஜாம் தடவிய பிரெட் வகைகள், பிரெட் ரோஸ்ட், சாண்ட்விச், பர்கர் என பிரெட்டில் எக்கச்சக்க ரெசிப்பிகள் வந்துவிட்டன. இதற்கு மயங்கி தினமும் பிரெட் உணவுகளைச் சாப்பிட்டால் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் வினோத். ``பிரெட்டில் கோதுமை பிரெட், குளூட்டன் ஃப்ரீ பிரெட் என நிறைய வகைகள் இருக்கின்றன. அளவு மற்றும் சுவையில் மட்டுமன்றி, ஊட்டச்சத்து வகைகளிலும் இவை ஒன்றுக்கொன்று மாறுபடும். பிரெட் சாப்பிடுபவர்களில் பலரும், அதில் நிறைய ஊட்டச்சத்துகள் இருப்பதாக நினைக்கின்றனர்.

உண்மையில் ஒரு பொருள் சுத்திகரிக்கப்பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும். சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும். அதுவே சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரெட்டாக இருந்தால், அதில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கும்.

* கார்போஹைட்ரேட், உடலின் உள்ளே செல்லும்போது, அது சர்க்கரைச் சத்தாக மாறும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போவதுடன் மலச்சிக்கல் ஏற்படலாம். உப்புச் சத்தும் அதிகரிக்கும். தொடர்ந்து பிரெட் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். * மாவுச் சத்து அதிகமுள்ள சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகள் உடலின் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்நிலை நீண்ட நாள் தொடர்ந்தால், சர்க்கரைநோய் பாதிக்கலாம். * பிரெட்டை, எந்த வடிவத்தில் உட்கொள்கிறோம் என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலும் பட்டர் சேர்த்தோ, ஜாம் தடவியோ, ரோஸ்ட்டாகவோ, சாண்ட்விச்சாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ உட்கொள்ளப்படுகிறது. இவற்றில் சேர்க்கப்படும் எண்ணெய், காய்கறிகள் மற்றும் வறுக்கப்படும் நேரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக பிரெட் கடினமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும் என்பதால், செரிமானம் மிக மெதுவாகவே நடைபெறும். அதனால், மூச்சுக்குழாய் பாதித்து சளித் தொற்று ஏற்படலாம். மற்றவர்களைவிட குழந்தைகளுக்குச் சளித் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். * எந்த வடிவத்தில் பிரெட் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதைக் கொண்டே கலோரி அளவு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, பீட்ஸா வடிவத்திலுள்ள பிரெட் வகைகளை உட்கொண்டால் ஒருநாளில் ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மொத்த கலோரி அளவில் பாதிக்குமேல் உட்கொண்டதற்குச் சமம்.

பர்கரின் உள்ளே என்னென்ன ஸ்டஃப்டு செய்யப்பட்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டியிருக்கும். ஜாம் தடவினால், அதிலுள்ள கார்போஹைட்ரேட் அளவைப் பார்க்க வேண்டும். ஆக, அன்றாடம் பிரெட் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் முடிந்தவரை அப்பழக்கத்திலிருந்து வெளிவருவது நல்லது. குறிப்பாக, கோதுமை மாவைச் சுத்திகரித்து அதில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்கிறார் கற்பகம் வினோத்.