Search News

உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட கூடியவைகளும் ,சாப்பிட கூடாதவைகளும்

         ஓட்டப்பயிற்சி என்பது ஒரு வகை விளையாட்டு அல்லது உடற்பயிற்சி மட்டும் அல்ல. ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதை லட்சியமாக வைத்து பயிற்சி செய்பவர்களும் உண்டு. இது ஒரு புறம் இருந்தாலும், ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னர் என்ன சாப்பிடலாம் என்பது குறித்த ஒரு குழப்பம் பலருக்கும் உண்டு.
       அதிக உணவு சாப்பிட்டவுடன் ஓட்டப்பயிற்சி செய்வதால் உங்கள் வயிறு கனமாக இருந்து ஒரு வித வலி உண்டாகும். சாப்பிடாமல் அல்லது மிகக் குறைந்த அளவு சாப்பிட்டு விட்டு ஓட்டப்பயிற்சி செய்வதால் இரண்டு மைல் ஓடியவுடன் உங்கள் மூட்டுகள் பிண்ணிக் கொண்டு வலி உண்டாகும். சரியான உணவு சரியான உணவு சீரான ஓட்டப்பயிற்சிக்கு துணை நிற்கும். ஓட்டப்பயிற்சிக்கு உறுதுணையாக நிற்கும் ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவை எடுத்துக் கொள்வது மிகவும் நலன் பயக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் சரியான உணவு அட்டவனையை மேற்கொள்வதால் உங்கள் குறிக்கோளை எளிதில் அடையாளம்.
    ஜாக்கிங் ஓட்டப்பயிற்சிக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவு ஊட்டச்சத்து அதிகம் உள்ளதாகவும், ஓடுவதற்கு ஆற்றலைத் தரும் உணவாகவும் இருக்க வேண்டும். அதற்கான ஒரு வழிகாட்டியாக இந்த பதிவு உள்ளது. இதில் ஓட்டப்பயிற்சிக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து பயன் அடையுங்கள். ஓட்டப்பயிற்சிக்கு முன் ஓட்டப்பயிற்சி செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக எதாவது சாப்பிடலாம். குறிப்பாக, அந்த உணவு போதுமான அளவு கலோரிகள், குறைந்த நார்ச்சத்து, குறைந்த கொழுப்பு கொண்ட உணவாக இருக்க வேண்டும். அத்தகைய உணவே சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆனாலும், கலோரி அளவில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி மிதமான கலோரி அளவு கொண்ட உணவை உட்கொள்வது மிகவும் பலனளிக்கக் கூடியதாக உள்ளது.
         நீண்ட தொலைவு ஓட்டப்பயிற்சி செய்ய , ஜூஸில் போதுமான அளவு சர்க்கரை சேர்ப்பது நல்லது. செர்ரி, குருதி நெல்லி அல்லது வேறு எதாவது ஜூஸ் கூட குடிக்கலாம். குறிப்பாக குவேர்சிடின் என்னும் அன்டி ஆக்சிடென்ட் உள்ள ஜூஸ் குடிப்பது நல்லது. இருப்பினும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்களில் சிலர், ஜூஸ் பருகிவிட்டு பயிற்சி மேற்கொள்வதால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதின் காரணமாக, சிறிது நேரத்திற்கு பிறகு பயிற்சியில் தொய்வு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனைத் தவிர்க்க பாதாம் அல்லது வேக வைத்த முட்டை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை உறிஞ்சுவதில் காலதாமதம் உண்டாகிறது. இவற்றில் உள்ள அதிக அளவு புரதம் உடலில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை தாமதம் செய்கிறது.                    
    30 நாட்களில், 100 கிலோவிலிருந்து 64 கிலோ ஆகலாம். எடையை குறைக்க உலகின் சிறந்த உணவு! - 1 மாதத்தில் 28 கிலோ உலர் திராட்சை, பேரிச்சை, அத்திப்பழம் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும்போது அதிகமான அளவு உலர் திராட்சை, பேரிச்சம் பழம் மற்றும் அத்திப் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இவை உடனடி கலோரிகளைத் தந்து மேலும் சில நுண் ஊட்டச்சத்துகளைத் தருவதாக உள்ளன. இந்த வகை நுண் ஊட்டச்சத்துகளுக்காக பல வீரர்கள் எனர்ஜி பார்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் நட்ஸ் இந்த நுண் ஊட்டச்சத்துகளை அதிக அளவில் கொடுக்கின்றன. ஓட்டப்பயிற்சிக்கு இந்த நுண் ஊட்டச்சத்துகள் மிகவும் அவசியம். இந்த வகை நுண் ஊட்டச்சத்துகளுடன் சேர்த்து ப்லவனைடு, அன்டி ஆக்சிடென்ட், பாலி பினாலிக், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மற்றும் மெக்னீசியம் போன்றவற்றையும் உலர் திராட்சை, பேரிச்சை மற்றும் அத்தி பழங்கள் கொண்டுள்ளன. நட்ஸ் பட்டர் நீண்ட தூரம் ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதற்கு புரதம் மற்றும் கொழுப்பு அவசியம். நட்ஸ் பட்டர் மற்றும் தேன் சேர்க்கப்பட்ட சில வகை அரிசி கேக் விரைவான கார்போ சத்து மற்றும் தாமதமாக எரியும் கொழுப்பு சத்து ஆகியவற்றைத் தருகின்றது. அரிசி கேக்குக்கு மாற்றாக வெள்ளை பிரட் கூட எடுத்துக் கொள்ளலாம்.
       காபி நீங்கள் காபி பிரியராக இருந்தால் ஒரு கப் எஸ்ப்ரஸோ ஒரு சிறந்த உணவாகும். உங்களுக்கு காபி பிடிக்காது அல்லது காபின் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் பட்சத்தில் இதனை தவிர்ப்பது நல்லது. நல்ல தூக்கம் காலையில் ஓட்டப்யிற்சி மேற்கொள்வதற்கு முன்னர் இரவு 8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம். தூக்கத்தில் குறைபாடு தோன்றுவதால் காலையில் சோர்வு உண்டாகி ஓட்டப்பயிற்சி தடை படலாம். காலையில் ஆற்றலுடன் திகழ இரவில்  சிறந்த முறையில் உறங்குவது அவசியம்.

சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள சில டிப்ஸ்

நிறம் என்பதோ, வசீகரமாக இருப்பது மட்டுமோ அழகல்ல. ஆரோக்கியமாக இருப்பதுதான்  உண்மையான அழகு. பளீரென்ற கண்கள், வெண்மையான பற்கள், பளபளக்கும் தோல் இதெல்லாம் முகப்பொலிவைக் கூட்டும்.  உடல்நலத்தோடு இருந்தாலே முகம் அழகாக இருக்கும். காரணம் முகம் தான் உடல்நலத்தின் கண்ணாடி. ஆரோக்கியமாக பராமரிக்கப்படும்  முகம் அனைவரையும் கவரும். நமது அழகைப் பாதுகாப்பதில் உணவுப் பழக்கம், ஃலைப் ஸ்டைல் ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.  மேக்கப் எல்லாம் அடுத்தக்கட்டம் தான்.

அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் பலர் எடைக் குறைப்பில் ஈடுபடுகின்றனர்.  அதன் காரணமாக காலை உணவை  தவிர்க்கின்றனர். சிலர் கார்போஹைட்ரேட் உணவுகளையே முழுவதுமாக தவிர்த்து விடுகின்றனர். உணவை தவிர்க்கும்போதோ, இவ்வாறு  உணவு முறையில் மாற்றம் கொள்ளும்போதோ வயதான தோற்றம் உண்டாகலாம். இவர்கள் இந்த மாதிரியான உணவுப்பழக்கத்தை இரண்டு  வருடங்கள் பின்பற்றினால் தலைமுடி கொட்டிப்போதல், கண்களில் குழி விழுதல், கண்களைச் சுற்றிக் கருவளையம், இளநரை போன்ற  காரணங்களால் இருபது,  இருபத்தி ஐந்து வயதிலேயே நாற்பது வயதைப் போல தோற்றம் அளிப்பார்கள். உடல் சுருக்கம் மற்றும் மார்பகம்  தளர்ந்து போதல் போன்றவையும் ஏற்படலாம். அதனால் உணவைத் தவிர்ப்பதை விட்டு முறையான உணவுப் பழக்கவழக்கத்தை  மேற்கொள்ள வேண்டும். 

ஊட்டச்சத்துள்ள சமச்சீர் உணவு, தண்ணீர், காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். தண்ணீர் நிறைய  குடிக்க வேண்டும்.  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவையில்லை என்பார்கள்.அதுபோல் தினமும் ஒரு ஆரஞ்சை  சாப்பிட்டால் ப்யூட்டிஷியனிடம் செல்ல வேண்டாம். அதிலுள்ள வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் தண்ணீர், சூரிய ஒளி,  அழகு சாதனப்பொருட்களால் நம் உடம்பில் ஏற்படும் மாசுக்களை வெளியேற்றக் கூடிய எதிர்ப்புச் சக்தியைத் தரவல்லது. 

வைட்டமின் ஏ,  கே, டி போன்ற சத்துக்களையும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். ஜூஸ், இளநீர்  இதெல்லாம் எடுத்துக் கொண்டாலும் தண்ணீர் தேவையான அளவு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. ஜூஸ், இளநீர், பழரசங்கள் போன்றவை  நம் உடலுக்குத்தேவையான எனர்ஜி கொடுக்கும். ஆனால் ஹைட்ரேஷனுக்கு (Hydration) தண்ணீர் அவசியம். தண்ணீர்தான்நம் உடலில்  உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றக் கூடியத் தன்மை கொண்டது. நச்சுப்பொருட்கள் வெளியேறும் போது முகம் இயல்பாகவே  பொலிவாக மாறும்.

சுத்தம் 

அழகை பராமரிப்பதில் உணவை அடுத்து சுத்தம் பெரும் பங்கு வகிக்கிறது. நம் உடம்பில் 4 வாரங்களுக்கு ஒரு முறை பழைய செல்கள்  இறந்து புது செல்கள் உற்பத்தியாகும். தலையில் நாள்தோறும் புது செல்கள் உருவாகும். உதிர்ந்த செல்களை நீக்கினால்தான் புது செல்கள்  நன்கு வளர்ச்சிஅடையும். அதற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது அவசியம். மண்டையோடு சுத்தமாக இல்லாமல் போனால்  தலையில் பொடுகு அதிகரிக்கும். அதனால் முடி கொட்டும். பொடுகை சொறியும்போது முகத்தில் உதிர்ந்தால் சிலருக்கு முகத்தில் பொரி  பொரியாக ஏற்படும். பொடுகினால் ஏற்படும் அந்த மாற்றம் முக அழகைக்கெடுக்கும். தலை சுத்தமாக இல்லாவிட்டால் முக அழகு  பாதிக்கப்படும். தலைமுடி சுத்தத்தைப் பேணுவது போல் சருமத்தையும் பராமரிப்பதும் அவசியம்.

சருமப் பராமரிப்பு

அதற்கு  நம் சருமம்  எப்படிப்பட்டது  என்று நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது எண்ணெய்ப் பசை கொண்ட சருமமா?  உலர்ந்த சருமமா அல்லது சென்ஸிடிவ்வான சருமமா  என்பதை  முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரும்  அழகு சாதனப்பொருட்களோ, நம் தோழிகள் பயன்படுத்தும் அழகுப்பொருட்களோ நமக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சருமம் மாறுபடும். நம் சருமத்துக்குத் தகுந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த  வேண்டும். அதனால் நமது குடும்ப மருத்துவரிடமோ, ப்யூட்டிஷியன்களிடமோ சென்று நம் சருமம் எப்படிப்பட்டது என்று கேட்டுத் தெரிந்து  கொள்ள வேண்டும். 

நம் சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு ஃபேஷியல் செய்து கொள்ளலாம். நமது தோலுக்கு தகுந்த மாதிரியான பொருட்களை  தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். மாதத்திற்கொரு முறை யாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பார்லருக்கும் செல்லலாம். நம்  சௌகரியம் தான். ஆனால் நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். அந்த விஷயத்தில் நாம் மிகக்  கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காகப் பார்த்தால் நம் சருமத்தின் அழகு பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்  கொள்ளுங்கள்.அதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் வாங்கும் காஸ்மெட்டிக்ஸ் தரமானதாக இருக்கிறதா  என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். வீட்டிலும் சருமப் பராமரிப்பு மேற்கொள்ளலாம். 

கிளன்சிங் 

காய்ச்சாத பால் எடுத்து அதனுடன் கிளிசரின் பத்து சொட்டு, எலுமிச்சைச் சாறு ஐந்து சொட்டு கலந்து அதில் பஞ்சை நனைத்து முகம்,  கழுத்து மற்றும் கைகள் என அழுந்தித் துடைக்க வேண்டும். இது ஓர் எளிமையான சிறந்த கிளன்சிங் முறை. 

ஸ்க்ரப்

நன்கு பழுத்த பப்பாளிப்பழம் அல்லது அன்னாசிப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரிப் பழத்தை மிக்ஸியில் விட்டு தண்ணீர் விடாமல் அரைத்து  அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைப் பொடி, கால் ஸ்பூன் சர்க்கரை கலந்து அந்தக் கலவையை முகம், கழுத்து, கை போன்ற இடங்களில்  வட்டவட்டமாகத் தேய்க்க வேண்டும். இதனால் நம் உடம்பில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க  வேண்டும் என்று கூட அவசியமில்லை. இதனை குளிப்பதற்கு முன்னால் நன்கு தேய்த்து சிறிது நேரம் ஊற விட்டுப் பின்னர் குளிக்கலாம்.  பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களில் உள்ள என்ஸைம்கள் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டவை. வாரம்  இரண்டு முறை இந்த ஸ்க்ரப்பை செய்து கொள்ளலாம். 

ஃபேஸ் பேக்

 முகப்பொலிவைக் கூட்டுவதற்காக முகம் மற்றும் கழுத்திற்கு வாரம் ஒரு முறை ஃபேஸ் பேக் போடலாம். வீட்டிலேயே எளிமையாக  ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். அதற்கு முதலில் மேரிகோல்டு வாட்டர் தயாரிக்க வேண்டும். 

மேரி கோல்டு வாட்டர் தயாரிக்கும் முறை

மினரல் வாட்டர் -– 1 லிட்டர்
கிளிசரின் –- 30 மில்லி
சாமந்திப் பூ -– இரண்டு கை கொள்ளும் அளவு. 

மினரல் வாட்டரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி அதில் சாமந்திப் பூவையும் கிளிசரினையும் போட்டு 24 மணி நேரத்திற்கு மூடி  வைத்துவிட வேண்டும். மறுநாள் அந்த நீரை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டால் 15  நாட்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இரவில் படுக்கும்போது அந்த நீரை பஞ்சில் தொட்டு முகம், கழுத்துபோன்ற பகுதிகளை அழுந்தி  துடைக்கலாம். இந்த வாட்டர் சிறந்த டோனராக செயல்படும். அடைப்பட்டிருக்கும் முகத்துவாரங்கள் திறந்து எண்ணெய் பசை மற்றும்  அழுக்கு ஆகியவற்றை நீக்கும்.

மேரி கோல்டு வாட்டரைப் பயன்படுத்தி ஃபேஸ்பேக் தயாரிக்கும் முறை

அதி மதுரப்பொடி - அரை தேக்கரண்டி, 
அரிசி மாவு  - அரை தேக்கரண்டி, (ஜப்பானீஸ் டெக்னிக்), 
சர்க்கரை - ஒரு சிட்டிகை,
லைம் ஆயில் (அரோமா ஆயில்) -  3 சொட்டுக்கள், 
ஜெர்ரேனியம்,ஆயில் (அரோமா ஆயில்) -  3 சொட்டுக்கள். 

இவை அனைத்தையும் மேரிகோல்டு வாட்டர் போட்டு கலந்து முகம், கழுத்துப் போன்ற பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க  வேண்டும். அதன் பிறகு கழுவ வேண்டும். இந் தஃபேஸ்பேக்கை பயன்படுத்த முகச்சுருக்கங்கள் குறையும். இப்படி எளிமையான முறையில்  நம் அழகை பாதுகாக்கலாம்.    

கால் பாதங்களில் உள்ள வெடிப்பை போக்க வழிமுறைகள்

பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம். சில டிப்ஸ்...

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின் தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில்  பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

* வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாகத் தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின்பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

சமைக்கும் பெண்களுக்கு சில டிப்ஸ்

* பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து விட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு  மூடி வைத்தால் 15 நிமிடத்தில் பூவாக மலர்ந்து விடும். பிறகு தாளித்தால் குழையவே குழையாது. ஒன்றோடு ஒட்டாமல் ஜமாய்க்கும்.
* சுண்டல் தாளித்த கையோடு ரெடிமேட் புளியோதரைப் பொடியை தூவி  இறக்கினால் சுண்டல் சூப்பராக இருக்கும்.
* சிறிது பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து சாம்பார் பொடியுடன் சேர்த்தால் சாம்பார் சூப்பராக இருக்கும்.
* சாம்பாரில் காய்களுடன் ஒரு பெரிய நெல்லிக்காயையும் கட் பண்ணிப் போட்டு சமைத்துப் பாருங்கள். கல்யாண சாம்பாரையும் மிஞ்சி விடும் சுவை.  சத்தானதும் கூட.
* சாறு பிழிந்த எலுமிச்சைப் பழத்தோலைத் தூக்கி எறிந்து விடாமல், உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அதோடு சேர்த்து வேக வையுங்கள்.  உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும்.
* கீரைகளை மூடி போட்டு வேகவிடக் கூடாது. வெண்ணெய் அல்லது சர்க்கரை சேர்த்தால் பச்சை நிறம் மாறாது.
* சூடான சமையல்களில் எலுமிச்சைச்சாறு பிழியக் கூடாது. சற்று ஆறியவுடன் பிழியவும்.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகம் கொதிக்கக் கூடாது.
* எந்தவித ஊறுகாய் தயாரித்தாலும் கடுகு போடுவதற்கு பதில் சிறிதளவு சோம்பை தாளித்து சேர்த்தால் ஊறுகாய் சுவையாக இருக்கும்.
* இட்லி செய்ய அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் இட்லி பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.
* தயிர் வடை செய்யும்போது வடையை பொரித்து சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.
* புதினா அதிகம் கிடைக்கும் நேரத்தில் சுத்தம் செய்து காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையான பொழுது கொதிக்கும் டீயில் 1/2  டீஸ்பூன் இந்தப் பொடியை சேர்த்து பின்பு பால் சேர்த்து வடித்தால் சுவையான மின்ட் டீ கிடைக்கும். அதே போல் 1 டம்ளர் சுடுநீரில் 1/2 டீஸ்பூன்  சேர்த்து வாய் கொப்புளித்தால் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
* தேங்காய் சாதம் செய்யும்போது கொஞ்சம் பாதாம், முந்திரியை வெறும் கடாயில் வறுத்து கரகரப்பாக பொடித்து சேர்த்து, 1/2 டீஸ்பூன் சர்க்கரையும்  சேர்த்து கிளறினால் வாசனையும், சுவையும் கூடுதலாக கிடைக்கும்.

தீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்

பண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான்! பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்துப் பர்த்து செலக்ட் செய்து, பட்சணங்களை தயார் செய்து, உறவு - நட்பு வட்டாரத்தில் விநியோகித்து, பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி முடிக்கும் சமயத்தில்... 'அடுத்த தீபாவளி சீக்கிரம் வந்துவிடாதா...’ என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். இதோ வந்து விட்டது இனிய தீபாவளி. இந்த இன்பப்பொழுதில் உங்களை பாராட்டு மழையில் நனைய வைக்கும் வகையில், 30 வகை தீபாவளி பட்சணங்களை சிறப்பாக செய்யக் கற்றுத்தருகிறார், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்.  

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

லட்டு

தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.

குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.

கடலைப்பருப்பு சுய்யம்

தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ

மேல்மாவுக்கு: மைதா மாவு - 75 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

தேங்காய் சுகியன்

தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

மேல் மாவுக்கு: தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு - 100 கிராம், உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும்.  பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெயில் சிதறிவிடும்.

உக்காரை

தேவையானவை:  கடலைப்பருப்பு - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 250 கிராம், நெய் - 100 கிராம், வறுத்த முந்திரி - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

மூங்தால் ஃப்ரை

தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

இது ஒரு மாதம் வரை கெடாது.

சன்னா தால் ஃப்ரை

தேவையானவை:  கடலைப் பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் - தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி,  நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்க வும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி

தேவையானவை: டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல்  - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், பால் பவுடர் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.

செய்முறை: ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.

இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

மைசூர்பாகு

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.

குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.

காராபூந்தி

தேவையானவை: வீட்டில் அரைத்த கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

இஞ்சி முரப்பா

தேவையானவை: சுக்குப் பொடி - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். பாகு பூத்து வருகையில் சுக்குப் பொடி, நெய் விட்டு நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.

குறிப்பு: சுக்குப் பொடி கடைகளில் கிடைக்கும். கிடைக்காதபட்சத்தில் சுக்கு வாங்கி, நன்கு நசுக்கி, மிக்ஸியில் பொடித்து, சலித்து உபயோகப்படுத்தவும். பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் வாயுத்தொல்லைக்கு இது நல்ல நிவாரணம் அளிக்கும்.

பாம்பே காஜா

தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, கலர் கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.

மோகன் தால்

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம், நெய் - முக்கால் கப், வறுத்த முந்திரி -  சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்

செய்முறை: நெய்யை சூடாக்கி கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... கடலை மாவு - கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி,  வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட... மோகன் தால் ரெடி!

குறிப்பு: செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.

கோதுமை அல்வா

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், கேசரி கலர் - சிறிதளவு, நெய் - 100 கிராம், எண்ணெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை - தலா ஒரு டீஸ்பூன், பால் - ஒரு கப்

செய்முறை: நெய் - எண்ணெயை ஒன்றுசேர்க்கவும். கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவைவிட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டி கொட்டி, மேலே வறுத்த முந்திரி,  வெள்ளரி விதையால் அலங்கரிக்கவும். ஆறியபின் துண்டுகள் போடவும்.

தேன்குழல்

தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், முழு உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

பாதாம் டிலைட்

தேவையானவை:  மைதா மாவு - 200 கிராம், பாதாம் துருவல் - 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை - 75 கிராம், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - அரை கிலோ, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.

மகிழம்பூ முறுக்கு

தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழ லில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, எண் ணெய் - கால் கிலோ, பெருங் காயத்தூள் - சிறிதளவு, காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:  பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும்.

சீப்பு ரோல்ஸ்

தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், தேங்காய்ப்பால் - கால் கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: பாசிபருப்பை வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மாவாக்கிக்கொள்ளவும். மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேங்காய்ப்பால், தேவையான நீர் விட்டுப் பிசையவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சிப்ஸ் தேய்க்கும் கட்டை / எவர்சில்வர் சிப்ஸ் கட்டரின் பின்புறம் (வரிவரியாக இருக்கும்) மாவை அழுத்தி தேய்த்து உருட்ட, சங்கு போல் சுருண்டு வரும். இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. மணம் மிக்க, ருசியான சீப்பு ரோல்ஸ் தயார். சோழி வடிவத்தில் இருக்கும் இது, சீப்பு சீடை என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர்

தேவையானவை: கெட்டி அவல் - 200 கிராம், பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 25 கிராம், வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், நறுக்கிய கொப்பரைத் துண்டுகள் - சிறிதளவு (நெய்யில் வறுக்கவும்),  எண் ணெய் - 250 கிராம், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் (நிறம் மாறாது) பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளற... ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.

குறிப்பு:  நெய் - சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.

ஜாங்கிரி

தேவையானவை: முழு உளுந்து - 200 கிராம், அரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 300 கிராம், கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், சீவிய முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.

துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

ரவா லாடு

தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை  - கால் கிலோ, பொடித்த சர்க்கரை - கால் கிலோ, நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.

செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

ஓமப்பொடி

தேவையானவை: கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, பச்சரிசி மாவு - 100 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள்  /  மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.

டூ இன் ஒன் லட்டு

தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், பாசிபருப்பு - 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 200 கிராம், நெய் - 150 கிராம், வறுத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: நெய் தவிர  மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்.

டபுள் கலர் மைதா கேக்

தேவையானவை: மைதா - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் அல்லது வனஸ்பதி - 100 கிராம், பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு, வெனிலா எசென்ஸ் - சில துளிகள், பால் பவுடர் - 50 கிராம்,

செய்முறை: நெய் (அ) வனஸ்பதியை வாணலியில் நன்கு சூடாக்கிக்கொள்ளவும். மைதா, பால் பவுடரை சேர்த்து நன்கு சலித்து, உருக்கிய நெய் / வனஸ்பதியில் விட்டு, இட்லி மாவு பதத்தில் தயாரித்துக்கொள்ளவும். இதை இரண்டு சரிபாகமாக பிரிக்கவும். சர்க்கரையில் பாதி அளவு எடுத்து சிறிதளவு நீர்விட்டுக் காய்ச்சி, நன்கு நுரைத்து வருகையில் பாதி மைதா மாவு கலவை சேர்த்து நன்கு கிளறவும். இது இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.

மீதி சர்க்கரையுடன் சிறிதளவு நீர் விட்டு, பச்சை ஃபுட் கலர்  சேர்த்து நுரைத்து வரும்போது, மீதி உள்ள மைதா கலவை சேர்த்து நன்கு கிளறி, இறுகும்போது வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இதை நெய் தடவிய தட்டில் இருக்கும் மைதா கலவை மீது நன்கு பரவலாக சேர்த்து, சமன் செய்து, லேசாக சூடு இருக்கையில் விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும்.

கேஷ்யூ ஃப்ரை

தேவையானவை: பாதியாக இருக்கும் முந்திரி - 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) - அரை கப், ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி - பச்சை மிளகாய் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், இளம் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிது, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை: ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து,  சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.

பாதுஷா

தேவையானவை: மைதா - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, நெய் - ஒன்றரை டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு,  ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை:  உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து  இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து,  கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

பாதாம் மில்க் அல்வா

தேவையானவை: பாதாம் பருப்பு - 100 கிராம், பால் - 100 மில்லி, சர்க்கரை - 150 கிராம், பாதாம் எசன்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை, நெய் - 50 கிராம்.

செய்முறை: பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும்.  அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்

குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.

காரா சேவ்

தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், பச்சரிசி மாவு - 50 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, ஓமம் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.

இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

பந்தர் லட்டு  

தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 150 கிராம், எண்ணெய்  - பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.

ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.

டிரை ஃப்ரூட் அல்வா

தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சை - 100 கிராம், கர்ஜூர் - 8 (விதை நீக்கியது),  நெய் - 100 கிராம், எண்ணெய் - 50 மில்லி, சர்க்கரை - 250 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 25 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

அசோகா

தேவையானவை: பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) - 100 கிராம், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:  சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

ஆச்சி கிச்சன் ராணி

நவதானிய அப்பம்

தேவையானவை:  நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், ஆச்சி பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் -  ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

செய்முறை: நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை  தூவிப் பரிமாறவும்.

அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்

தலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்

முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும்  வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும்,  பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர  வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.


சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர  வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும்.

முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு  உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான  ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு  அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

உடல் சூட்டை தணிக்கும் மருத்துவ

உணவுக்கு முன்... உணவுக்குப் பின்...

மருந்துச்சீட்டுகளில் உணவுக்கு முன், உணவுக்குப் பின் என்று குறிப்பிடுவதைப் போல இன்றைய உணவு முறையும் மாறிவிட்டது. ஓட்டல்களில் ஆர்டர் செய்த உணவு வரும் முன்பு, Starter என்ற பெயரில் எதையேனும் கொறிக்கவோ, உறிஞ்சவோ செய்கிறார்கள். அதேபோல் வயிறு நிறைய சாப்பிட்ட பிறகும் Dessert என்ற பெயரில் பல வகைகள் காத்திருக்கின்றன. பில் செலுத்தும் காசாளரின் டேபிளில் சீரகம், சோம்பு போன்ற டப்பாக்களிலும் வேறுவிதமான டெஸர்ட்டுகளை அள்ளி சாப்பிட்டு விட்டு கிளம்புகிறோம். 

இந்த உணவுமுறை இயல்பானதுதானா அல்லது தவிர்க்க வேண்டுமா என்று உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணனிடம் பேசினோம்... ‘‘சாதாரணமாகவே உணவு உண்ட பிறகு முன்பு பெரியவர்கள் வெற்றிலை, பாக்கு போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அது செரிமானத்துக்கு உதவும் என்பதால் அத்தகைய பழக்கம் அன்று இருந்தது. அது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், இன்றைய நவீன காலத்தில் உணவகங்களில் சாப்பிடும்போது சீரகம், பெருஞ்சீரகம், ஸ்வீட் பீடா, வாழைப்பழம் போன்ற பதார்த்தங்களைத் தருகிறார்கள். பலருக்கு டீ, காஃபி சாப்பிடும் பழக்கமும் அதிகமாக இருக்கிறது. 

இது தவறானது. நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையில் அரைக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களாகப் பிரிகிறது. அதாவது, உணவு இரைப்பையில் நன்றாக செரிக்கப்பட்டு சிறுகுடல், பெருங்குடலுக்கு சென்று கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து என தனித்தனியாக பிரிந்து ரத்தத்தோடு கலக்கிறது. இந்த செயல்பாடுதான் நாம் உணவு எடுத்துக் கொள்வதற்கான முக்கியமான காரணம். அதனால் நாம் உண்ட உணவு நல்லவிதமாக ஜீரணம் ஆக வேண்டும். 

அதனால் செரிமானம் தடைபடாத வண்ணமும், உண்ட உணவின் சத்துக்களை உடலில் முழுமையாக கிரகித்துக் கொள்ளும் விதத்துக்கேற்றவாறும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு முழுமையான உணவு எடுத்துக்கொண்ட பிறகு, செரிமானத்திற்கென்று நாம் இன்னொரு உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது. உதாரணத்துக்கு வயிறு நிறைய பிரியாணி சாப்பிட்ட பிறகு, குளிர்பானங்களைக் குடிக்கிறார்கள். இந்தப் பழக்கங்கள் ஏற்கனவே உண்ட உணவை செரிப்பதற்கு சிக்கலை ஏற்படுத்தும். பிறகு என்ன சாப்பிட்ட வேண்டும். 

அதனால்தான் சாப்பிடுவதற்கு முன் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்’’ என்பவர் அதற்கான ஆரோக்கிய வழிகளைச் சொல்கிறார்.‘‘உணவு வேளையின் 30 நிமிடத்திற்கு முன் பழங்களை சாப்பிடலாம். வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா, திராட்சை போன்ற சதைப்பற்று, சாறு நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது அதிகபட்சம் 30 நிமிடங்களில் செரிமானம் அடைந்து நல்ல பசியைக் கொடுக்கும். ஜீரணத்திற்கும் உதவியாக இருக்கும். அதேவேளையில் உணவுக்குப் பிறகு பழங்கள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 

அது செரிமானத்திற்கு சிக்கலை உண்டாக்கும். மேலும், அந்த பழங்களில் உள்ள சத்துக்களும் வீணாகும். உணவை செரிப்பதற்கு நம்முடைய இரைப்பைக்கு உதவும் வகையில் உணவுக்கு பின்னான பதார்த்தங்கள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் வெந்நீர், சீரகம், சோம்பு, க்ரீன் டீ, பிளாக் டீ, இதில் எலுமிச்சை, இஞ்சி, நன்னாரி வேர் கலந்த வெந்நீர், மோர் போன்றவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

இவை எச்சில்(Saliva), செரிமான அமிலம்(Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல்(Bile). இந்த மூன்று திரவங்களின் அளவை அதிகரிக்கச் செய்ய நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கச் செய்கிறது. மசாலா உணவுகளால் ஏற்படும் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் எதுக்களித்தல் போன்ற பிரச்னைகளை தவிர்க்கிறது. வழக்கமாக பால், ஐஸ்க்ரீம், சூப், டீ, காஃபி போன்ற பண்டங்களை உணவுக்குப் பிறகு சாப்பிடக் கூடாது. ஏனெனில், ஏற்கனவே சாப்பிட்ட உணவோடு சேர்ந்து அதன் செரிமானத்திற்கு இடையூறு செய்யும். 

அதேபோல செரிமானத்திற்கு தேவையான மெட்டபாலிசம் அதிகரிப்பதையும் தடுக்கும். குறிப்பாக, நாம் உண்ட பிறகு கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்து இம்மூன்றும் ஜீரணமாவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் சாப்பிட்ட பிறகு இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. உணவுக்குப் பிறகு கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் கட்டாயமாக வெந்நீர், சீரகம், சோம்பு, சீவல் வெற்றிலை எடுத்துக்கொள்வது அவர்களின் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். 

அவர்களுக்கு இருக்கிற நெஞ்செரிச்சல், வாயுத் தொல்லையையும் போக்கும். அதே நேரத்தில் உணவகங்களில் வைத்திருக்கும் சோம்பு, சீரகம் போன்றவைகள் அதன் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு வெறும் சக்கைகளாகவே இருக்கிறது. அந்த வெறும் சக்கை சீரகத்தின் மேல் சர்க்கரை கோட்டிங் செய்யப்பட்டே ஓட்டல்களில் வைத்திருக்கிறார்கள்.’’

Blog Archive

Popular Posts