Recents in Beach

டெங்கு காய்ச்சல் வந்தால் இனி பயம் தேவையில்லை! விழிப்புணர்வுடன் இருப்போம்!


டெங்குகாய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மக்களை அச்சுறுத்தும் காய்ச்சலாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சல் வந்தால் மரணம் நிச்சயம், அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, நிலவேம்பு கஷாயம் மட்டுமே டெங்குவை தீர்க்கக்கூடிய ஒரே மருந்து, இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைந்தால் ஜூஸ் குடிக்க வேண்டும் எனப் பல குழப்பங்களும் சந்தேகங்களும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.டெங்குவைப் பற்றி போதுமான விழிப்புணர்வுகள் ஆங்காங்கே முகாம்கள் மூலம் நடத்தப்பட்டாலும், மக்கள் வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் யாரோ முகம் தெரியாத ஒரு நபர் பரப்பும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல், துறை வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்காமல், கண்மூடித்தனமாக பின்பற்றுவதே பல பிரச்னைகளுக்குக் காரணம். டெங்குகாய்ச்சல் பற்றி மிகத் தெளிவாகவும், நாம் அறியாத பல தகவல்களையும், தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ,
உள் மருத்துவம், நீரிழிவு நோய் மற்றும் தொற்று நோய்களின் துறைத் தலைவர் மற்றும் ஆலோசகரான , மருத்துவர் திலிப் குமார் , நமது ஆசியாவில் தமிழ் வாசர்களுக்காக பகிர்ந்துகொண்டதை இங்கே பார்ப்போம். (Dr. Dilip Kumar R MD DNB MRCP(UK) ) டெங்குகாய்ச்சல் என்றால் என்ன? மலேரியா, சிக்கன் குனியா போன்ற பல வைரல் காய்ச்சல்களைப் போல டெங்கு காய்ச்சலும் ஒரு வகையான வைரல் காய்ச்சல் என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்வோம். டெங்குகாய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமிகள் டெங்கு1, டெங்கு 2, டெங்கு 3, டெங்கு 4 என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
இந்த நான்கு வைரஸ்கள் 'செரோடைப்கள்' என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், ஒவ்வொன்றும் மனித இரத்த சீரம் உள்ள ஆன்டிபாடிகளுடன் வெவ்வேறு தொடர்புகளைக் கொண்டுள்ளன. இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஒவ்வொன்றும் ஒரே வகையான நோய் மற்றும் அறிகுறிகளை தரக்கூடியவை. டெங்குகாய்ச்சல் எவ்வாறு பரவுகின்றது ? "ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus mosquito.)" வகை கொசுக்கள் மட்டுமே டெங்கு காய்ச்சலைப் பரப்புவதற்கு முக்கியமான காரணம். நாங்க அபார்ட்மென்ட்ல இருக்கோம்,
எங்களை ஒன்றும் பண்ணாது என்று இருக்க முடியாது. ஏனெனில், இந்த வகையான கொசு கழிவுநீரில் உருவாவதில்லை. மாறாகச் சுத்தமான நீரிலிருந்து மட்டுமே இவை உருவாகின்றன. மேலும் வீட்டிற்குப் பின்புறம் நாம் உபயோகிக்காத டயர்கள், தேங்காய் மட்டைகள், உடைந்த பக்கெட்கள் வீசப்பட்டிருந்தால் உடனடியாக அதை வீசி எறிந்துவிடவும். ஏனென்றால், மழை தண்ணீர் இத்துடன் கலக்கும்போது, டெங்குவை பரப்பும் கொசுவுக்கு உற்பத்தியைப் பெருக்க நாமே வழிவகுத்தது போல ஆகிவிடும்.டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாக ஏழை மக்களாகவே இருக்கின்றார்களே? கொசுவுக்கு ஏழை பணக்காரன் என்னும் வித்தியாசம் இல்லை. மேலே குறிப்பிட்ட வகையான கொசு கடித்தால் டெங்கு யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம். ஏழை மக்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களில் அதிகமாக வசிக்கின்றனர். வசதி இருப்பவர்கள் கொசு கடிக்காத வகையில் தங்களைக் கொசுவர்த்தி, கிரீம்கள், வலைகள் மூலமாக தங்களைப் பாதுகாக்கின்றனர்.
மேலும் சிலருக்குக் கொசு கடித்ததால் காய்ச்சல் வருகிறது, உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என போதுமான தகவல்களை அவர்கள் அறிவதில்லை. டெங்கு தொற்று நிலைகள் என்னென்ன? டெங்கு தொற்று நிலைகள் மூன்று வகைப்படும். இது நாட்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. முதல் நிலை : (1-6 நாள்கள்) இந்த நிலையில் வெறும் காய்ச்சலால் மட்டுமே பாதிக்கப்படுவர். பொதுவாக நான்காவது நாளிலேயே காய்ச்சல் குறையத் தொடங்கிவிடும்ம.
ஐந்தாவது நாளன்று காய்ச்சல் முற்றிலுமாக குறைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை மட்டுமே காய்ச்சல் இருக்கும். இரண்டாம் நிலை : (5-8 நாள்கள்) பொதுவாக டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஐந்தாவது நாளன்று காய்ச்சல் குறைந்தாலும் அவர்களைப் பரிசோதிப்பதற்காக மருத்துவமனையில் வைத்திருப்போம். இதை மிகவும் கிரிட்டிக்கல் ஸ்டேஜ் என்று மருத்துவர்கள் அழைப்பார்கள். காய்ச்சலுக்கு பிறகே இரத்தக் கசிவு ஏற்படும்.
மரணம்கூட சம்பவிக்கலாம். அதனால் இந்நிலையில் எப்போது வேண்டுமென்றாலும் மருத்துவரின் உதவி தேவைப்படலாம். மூன்றாம் நிலை : (9-12நாள்கள்) இது மீட்பு நிலை. ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். இதிலிருந்து மீண்டுவிட்டால் மறுபடியும் டெங்கு வருவதற்கான வாய்ப்பில்லை.டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் : இந்த அறிகுறிகள் இருந்தால் அது டெங்குவாகத்தான் இருக்கும் என்று ஆணித்தரமாகக் கூற முடியாது. மழைக்காலம் முடிந்ததும் வரும் காய்ச்சல் என்றால் டெங்குவாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. டெங்கு பரவுகின்றது என்னும் செய்திகள் மூலம் நமக்கு இருக்கும் காய்ச்சல் டெங்குவாக இருக்குமோ ? என்று சந்தேகிக்கலாம். தொண்டை வலி, இருமல், சளி, கை கால் வலி, மூட்டு வலி போன்ற பிற வைரல் காய்ச்சல்களுக்கு வரும் அறிகுறிகளே டெங்கு காய்ச்சலுக்கும் உண்டு.
தீவிர டெங்குகாய்ச்சல் டெங்கு காய்ச்சலால் நமது உடலில் உள்ள 'பிளேட் லெட்' என்று சொல்லப்படும் ரத்தத் தட்டுகள் குறையும் என்பதை மட்டுமே பலரும் அறிந்து வைத்துள்ளனர். அதைவிடவும் ஆபத்தானது ரத்தக் குழாய்களில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி, உடல் ஊதிய நிலையில் காணப்படும். இரத்தத்தின் அடர்த்தி குறைந்து, இரத்தம் அழுத்தமும் குறைந்து இறுதியில் இறந்துவிடுவார்கள்.
எனவேதான் டெங்கு காய்ச்சலின் இரண்டாம் நிலையின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பாதுகாப்பான செயலாகும். இங்கே ரத்தத் தட்டுகளைப் பற்றிக் கூறியாக வேண்டும். ஒரு லட்சத்திற்கும் மேல் ரத்தத் தட்டுகளின் அளவு இருந்தால் நார்மல். ரத்தத் தட்டுகளின் அளவு இருபதாயிரத்திற்கும் குறைவாக இருந்தால் ஆபத்தான நிலை. அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சையால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது நூறு பேரில் இரண்டு பேர்கள் மட்டுமே இந்த தீவிர டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் அவரவரது எதிர்ப்புச்சக்தி, மரபணுக்கள் மற்றும் வைரஸின் தாக்கத்தைப் பொறுத்து. டெங்குவை பரப்பும் கொசு, அதன் பல்லில் 100 கோடி முதல், 2,000 கோடி வைரஸ் கிருமிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. அது கடிக்கும் மனிதனின் எதிர்ப்புச்சக்தியைப் பொறுத்தும், தன் பற்களில் தாங்கிச் செல்லும் வைரஸ் கிருமிகளின் அளவை பொறுத்தும் டெங்குவின் தீவிரம் வேறுபடும்.
அரசின் பொறுப்பின்மைதான் காரணமா? எல்லாவற்றிற்கும் நாம் அரசாங்கத்தைக் குறை கூறமுடியாது. இது முற்றிலும் சுகாதார பிரச்னை. மக்கள் ஒவ்வொருவருக்கும் சுய பொறுப்பு இருக்க வேண்டும். ஜுரம் உள்ள சிறுவர்களைப் பள்ளிக்குச் செல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது.... PTA association மூலம், பிள்ளைகள் அதிக நேரம் செலவிடும் இடமாகப் பள்ளிகள் இருப்பதால், பெற்றோர்கள் வலுவாகப் பள்ளி வளாகம் சுத்தமாக இருக்கும் பொருட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நிலவேம்பு கஷாயம் டெங்குவைத் தடுக்குமா? நிலவேம்பு கஷாயம் மட்டுமல்ல, பப்பாளி இலைச்சாறும் டெங்குவைக் குறைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த ஒரு மருத்துவத்தையும் முழுவதுமாகப் பொய் என்று கூறிவிட இயலாது. இதன் பலன் ஓவ்வொருவரின் உடல்நிலை மற்றும் மரபணுவைச் சார்ந்தது. உதாரணமாக ஒருவர் 10 ஆண்டுகளாக புகைபிடித்துக் கொண்டிருப்பார் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. ஆனால் புகைப்பிடிக்கத் தொடங்கிய 2 ஆண்டுகளில் சிலருக்கு நுரையீரல் புற்றுநோய் வருகிறது.
நிலவேம்பு சாறு குடித்தும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். டெங்குவால் பாதிக்கப்பட்டு ரத்தத் தட்டுகள் பத்தாயிரத்திற்கும் குறைவாக இருப்பவர்களில் சிலர் நிலவேம்புச் சாறும் குடித்தவர்களே. அதனால் உடல்நலனில் மெத்தனம் வேண்டாம். சுய மருத்துவத்தில் தீர்வு காணமுடியுமா? டெங்குவின் ஆரம்ப நிலையில் வந்தவர்களுக்கு, நானே பல அறிவுரைகளைக் கூறி இருக்கிறேன்.
அவர்கள் தினமும் மருத்துவரைச் சந்தித்து இரத்த பரிசோதனையை செய்ய வேண்டும். வீட்டில் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீரையாவது அருந்த வேண்டும். ஐந்தாம் நாள் முதல் எட்டாம் நாள் வரையில் ரத்தத் தட்டுகள் குறையாமல் பாதுகாக்க மருத்துவர் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.. இதைச் சரியாகப் பின்பற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவையில்லை.
ஆனால், இதை அனைவருக்கும் நாங்கள் பரிந்துரைப்பதில்லை, யாரிடம் இதைப்பற்றிய அறிவும் தெளிவும் உள்ளது என்றும், நாங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மீண்டும் மருத்துவரைச் சந்திக்க வருவார்களா என்றும் பார்த்தே பரிந்துரைக்கிறோம். அதுவும் அவர்களின் உடல் நலம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிந்த பிறகே அனுமதிக்கின்றோம். டெங்கு காய்ச்சலுக்கு தீர்வு என்ன? இதைக் குறைக்கத் தடுப்பூசிகள், மாத்திரைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கான தீர்வு குறித்து ஆராய்ச்சி நடந்துகொண்டே இருக்கிறது. நாம் இருக்கும் இடத்தைச் சுற்றி சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். தினமும் தண்ணீர், பழச்சாறுகள் நிறைய அருந்த வேண்டும். மழைக்குப் பின்பு காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி இரத்த பரிசோதனை செய்யவும். எங்கள் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர், ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை 20,000க்கும் குறைவாக அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரகம் செயலிழந்து சிறுநீர் கழிக்காமலும், இரத்த அளவை கண்டுபிடிக்கவே முடியாத நிலையிலும் இருந்தவரை உரியச் சிகிச்சை அளித்துஅவரை காப்பாற்றினோம். இப்போது கருவில் இருக்கும் குழந்தையும் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு டெங்கு குறித்த பல அறியத் தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் மருத்துவர் திலீப் குமார். அரசு ஒரு பக்கம் டெங்குவின் தீவிரத்தைக் குறைக்க தீவிர முயற்சி செய்து கொண்டிருந்தாலும், இன்றும் டெங்கு மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.
அதனால், முடிந்தவரை டெங்கு மரணங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை, பல்துறை வல்லுநர்களிடம் அறிந்து கொள்வோம். தொடர்ந்து ஏசியாவில் தமிழைப் படியுங்கள். உங்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருந்தால், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தவறாமல் பகிரவும்.

மேலும்பல பயனுள்ள உடல் நல குறிப்புகளை அறிந்துகொள்ள கீழே  உள்ள தலைப்பை கிளிக் செய்யுங்கள்

1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!


23. நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா ?